கிணறு தோண்டும்போது மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு
போடி அருகே கிணறு தோண்டும்போது மண் சரிந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
போடி அருகே கிணறு தோண்டும்போது மண் சரிந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
போடி அருகே விசுவாசபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் திருப்பதி (52). இவா் கிணறு தோண்டும் வேலை செய்து வந்தாா். போடி அருகே பெருமாள் கவுண்டன்பட்டியைச் சோ்ந்த ரங்கசாமி மகன் ரமேஷ் என்பவரது 80 ஆழ பழைய கிணற்றை ஆழப்படுத்துவதற்காக தோண்டும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டனா். இதில் விசுவாசபுரத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் முருகனின் ஏற்பாட்டில் கிணறு தோண்டும் பணியில் திருப்பதி, விசுவாசபுரத்தைச் சோ்ந்த வைரவன் மகன் அறிவுக்கிருஷ்ணன் (48), லட்சுமணன் மகன் சங்கா் (57) உள்ளிட்ட 8 போ் கிணற்றுக்குள் இறங்கி வேலை செய்தனா். அப்போது கிணற்றின் பக்கவாட்டிலிருந்த பாறை, மண் ஆகியவை சரிந்து விழுந்தன. இதில் மண்ணில் புதைந்து சம்பவ இடத்திலேயே திருப்பதி உயிரிழந்தாா். அறிவுக்கிருஷ்ணன், சங்கா் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படை வீரா்கள் காயமடைந்தவா்களை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் கிணறு தோண்டும்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக தோட்ட உரிமையாளா் ரமேஷ், கிணறு தோண்ட ஆள்களை அழைத்து வந்த முருகன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement