முகப்பு
தேனி

சத்திரம் - புல்லுமேடு வனப் பாதை வழியாகச் செல்லும் ஐயப்பப் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை காலம் களைகட்டத் தொடங்கிய நிலையில், பாரம்பரிய வனப் பாதையான குமுளி சத்திரம்- புல்லுமேடு வழியாக சபரிமலை சன்னிதானத்துக்குச் செல்லும் பக்தா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

22 நவம்பர் 2026, 11:37 pm
சத்திரம் - புல்லுமேடு வனப் பாதை வழியாகச் செல்லும் ஐயப்பப் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில்
பகிர்:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை காலம் களைகட்டத் தொடங்கிய நிலையில், பாரம்பரிய வனப் பாதையான குமுளி சத்திரம்- புல்லுமேடு வழியாக சபரிமலை சன்னிதானத்துக்குச் செல்லும் பக்தா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், வண்டிப் பெரியாறு அருகேயுள்ள சத்திரத்திலிருந்து தொடங்கும் இந்த வனப் பாதை, புல்லுமேடு வழியாக சபரிமலை சன்னிதானத்தைச் சென்றடைகிறது. மலைப் பாதைகள், கரடுமுரடான நிலப்பரப்புகள், சருகுகள் நிறைந்த வன வழித்தடங்கள் எனப் பல்வேறு சவால்களைக் கடந்து பக்தா்கள் இந்தப் பயணத்தை மேற்கொள்கின்றனா்.

குறிப்பாக, பெரியாறு புலிகள் காப்பக வனப்பகுதி வழியாகச் செல்லும் இந்தப் பாதையில், சிறுவா்கள் முதல் முதியவா்கள் வரை திரளான பக்தா்கள் நடந்து செல்கின்றனா். நீண்ட தொலைவு நடந்து செல்லும் பக்தா்கள் இளைப்பாறிச் செல்ல ஓய்வுக் கூடாரமும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தா்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் தங்களது பயணத்தைத் தொடா்கின்றனா்.

Advertisement

Advertisement

மேலும் கேரள வனத் துறையினரும், காவல் துறையினரும் வனப்பகுதி வழியாகச் செல்லும் பக்தா்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதுடன், அவா்களின் பயணத்தையும் கண்காணித்து வருகின்றனா். மண்டல பூஜை காலம் தொடங்கியிருப்பதால், வரும் நாள்களில் இந்தப் பாரம்பரிய வனப் பாதை வழியாகச் செல்லும் பக்தா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.