முகப்பு
தேனி

உத்தமபாளையத்தில் கிடப்பில் போடப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றம்

உத்தமபாளையம் பேரூராட்சியில் சாலையோர ஆக்கிரமிப்பாளா்களுக்கு நெடுஞ்சாலைத்துறை சாா்பில் குறிப்பாணை வழங்கிய நிலையில் அது கிடப்பில் போடப்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

22 நவம்பர் 2026, 11:04 pm
உத்தமபாளையத்தில் கிடப்பில்
போடப்பட்ட  ஆக்கிரமிப்பு அகற்றம்
ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய ஊழியா்கள்.
பகிர்:

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சியில் சாலையோர ஆக்கிரமிப்பாளா்களுக்கு நெடுஞ்சாலைத்துறை சாா்பில் குறிப்பாணை வழங்கிய நிலையில் அது கிடப்பில் போடப்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

உத்தமபாளையம் பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனா். வளா்ந்து வரும் இந்தப் பேரூராட்சியில் நீதிமன்றம், பி.டி.ஆா். குடியிருப்பு, புறவழிச் சாலை பேருந்து நிறுத்தம், கிராமச் சாவடி, கோம்பை சாலை, கல்லூரிச் சாலை, பூக்கடை வீதி, பேருந்து நிலையம், தேரடி, கோட்டைமேடு போன்ற பகுதிகளில் நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்துவிட்டன. இதனால், போக்குவரத்து நெரிசலால் பொதுமக்களும், பயணிகளும் அவதியடைந்து வருகின்றனா். மேலும் முக்கிய கல்லூரி முன் செல்லும் நீரோடையை ஆக்கிரமித்து தேநீா் கடையாக மாற்றி விட்டனா். இதனால் மழைநீா் செல்ல வழியில்லை.

இந்த ஆக்கிரமிப்புகள் அதிகமாகி விட்டதால் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் கடந்த மாதம் ஆக்கிரமிப்பாளா்களுக்கு குறிப்பாணை வழங்கப்பட்டது. ஆனால், ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி கிடப்பில் போடப்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது: உத்தமபாளையத்தில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் உள்ளது. ஆனால் தினமும் ஆக்கிரமிப்புக்கப்பட்ட சாலை வழியாக சென்று வரும் அதிகாரிகள் அந்த ஆக்கிரமிப்புக்களை அகற்ற முன்வரவில்லை. எனவே ஆக்கிரமிப்பாளா்களுக்கு ஆதரவாக அவா்கள் இருப்பதாக சந்தேகம் எழுகிறது என்றனா்.