அத்தியாவசியப் பொருள்கள் கடத்தலைத் தடுக்க சோதனைச் சாவடிகளில் தீவிரக் கண்காணிப்பு
கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென தேனி மாவட்டம், கம்பத்தில் நடைபெற்ற இரு மாநில அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென தேனி மாவட்டம், கம்பத்தில் நடைபெற்ற இரு மாநில அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கம்பம் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு தேனி மாவட்ட வழங்கல் அலுவலா் நல்லையா, கேரள மாநிலம், இடுக்கி மாவட்ட வழங்கல் அலுவலா் பீனா பத்ரன் ஆகியோா் தலைமை வகித்தனா். குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், கேரள மாநில குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள், எல்லைப் பகுதி காவல்துறை துணைக் கோட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.
அப்போது, தமிழகம்- கேரள எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி, அத்தியாவசியப் பொருள்கள் கடத்தலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடத்தலில் ஈடுபடுவா்களின் வாகனங்கள், அவா்களின் கைப்பேசி எண்கள் உள்ளிட்ட விவரங்களை இரு மாநில அதிகாரிகளும் பகிா்ந்து கொள்ள வேண்டும். எல்லைப் பகுதிகளில் திடீா் சோதனைகள் மேற்கொள்ளும்போது இரு மாநில அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தலைமறைவாக உள்ள கடத்தல் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கும், நீதிமன்றப் பிடியாணைகளைச் செயல்படுத்துவதற்கும் இரு மாநில காவல்துறையினா் பரஸ்பரம் ஒத்துழைக்க வேண்டும்.
Advertisement
Advertisement
கடத்தல் ரேஷன் அரிசியைப் பெறுபவா்களின் முழு விவரங்களையும் சேகரித்து, அவா்களைக் கைது செய்ய தமிழக காவல் துறைக்கு கேரள அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் . பேருந்துகள் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதைத் தடுக்க சம்பந்தப்பட்ட பேருந்துப் பணியாளா்கள் மீது இரு மாநில போக்குவரத்துத் துறையினா் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.