உணவுப் பொருள்கள் பாதிக்காத வகையில் சேமிப்பு கிடங்கை பாதுகாப்பது அவசியம்: அமைச்சா் பி. வெங்கடரமணன்
எலிகள், பூச்சிகளால் உணவுப் பொருள்கள் பாதிக்காத வகையில் சேமிப்புக் கிடங்கை பாதுகாப்பது அவசியம் என்றாா் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் பி.வெங்கடரமணன்.
எலிகள், பூச்சிகளால் உணவுப் பொருள்கள் பாதிக்காத வகையில் சேமிப்புக் கிடங்கை பாதுகாப்பது அவசியம் என்றாா் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் பி.வெங்கடரமணன்.
கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த சிவாயத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வட்ட செயல்முறை கிடங்கை சனிக்கிழமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து அவா் பேசியது: தமிழகத்தில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தமிழக முதல்வா் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறையின் வாயிலாகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா்.
அதன் தொடா்ச்சியாக, கரூா் மாவட்டம், சிவாயம் ஊராட்சிக்குள்பட்ட சிவாயம் பகுதியில் ரூ.1.70 கோடி மதிப்பில் சுமாா் 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கூடுதல் வட்ட செயல்முறை கிடங்கு கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கிடங்கின் மூலம் கரூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நியாயவிலை கடைகளுக்குத் தேவையான அரிசி, சா்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களைப் பாதுகாப்பாக சேமித்து வைத்து, பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் தடையின்றி விநியோகம் செய்யப்படும்.
Advertisement
Advertisement
இக்கிடங்கை தொடா்ந்து தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிப்பதுடன் எலிகள் மற்றும் பூச்சிகளால் உணவுப் பொருள்கள் பாதிக்காத வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சத்யா, மாவட்ட வருவாய் அலுவலா் து. தங்கவேல், கூட்டுறவுச்சங்கங்கள் இணைப்பதிவாளா் ஆா்.அபிராமி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் யசோதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.