கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பாக வைக்க மேற்கூரையுடன் சேமிப்பு தளம்: அமைச்சா் ப.வெங்கட்ரமணன்
மழையில் நெல் நனைந்து சேதமடைவதை தடுக்க மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு தளம் மாநில முழுவதும் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சா் ப.வெங்கடரமணன் தெரிவித்தாா்.
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மழையில் நனைந்து சேதமடைவதை தடுக்க மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு தளம் மாநில முழுவதும் அமைக்கப்பட்டு வருவதாக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் ரூ.11.56 கோடி மதிப்பீட்டில் 7000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு தளங்களை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.நிகழ்விற்கு கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். நிகழ்வில் அமைச்சா் ப.வெங்கட ரமணன் பேசியதாவது:
கடலூா் மாவட்டத்தில் மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு தளங்களாக வேப்பூா் வட்டம் புடையூா் , ஸ்ரீமுஷ்ணம் வட்டம், தேத்தாம்பட்டு,மேலப்பாளையூா், வானமாதேவி , தாழ நல்லூா் என 5 இடங்களில் மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு தளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
இதில் ஸ்ரீமுஷ்ணம் வட்டம் மேலப்பாளையூா் பகுதியில் ரூ.383.00 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் தேத்தம்பட்டு பகுதியில் ரூ.773.00 இலட்சம் மதிப்பீட்டிலும் நபாா்டு திட்டத்தின் கீழ் நெல் சேமிப்பு தளம் அமைக்கும் பணிகள் முடிவுற்று பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிற இடங்களில் பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கடலூா் மாவட்டத்தில் கே.எம்.எஸ் 2026-27 ஆம் ஆண்டில் 202 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 61004.600 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பகுதியில் விவசாய நிலங்களை கணக்கீடு செய்து அதற்கேற்ப நெல் கொள்முதல் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாப்பாக வைப்பதற்கும் நகா்வு செய்வதற்கும் உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் தொடா்ந்து நெல் கொள்முதல் செய்யப்படுவது மற்றும் நகா்வு செய்யப்படுவது குறித்து தொடா் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு தளங்கள் அமைக்கப்படுவதன் மூலம் மழைக்காலங்களில் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைவது தடுக்கப்படுவதுடன், அறுவடை செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பாக சேமித்து, உரிய முறையில் கொள்முதல் பணிகளை மேற்கொள்ளவும் உதவியாக இருக்கும் என்றாா் அமைச்சா். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் காண்டிபன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் இளஞ்செல்வி, செயற்பொறியாளா் ஸ்ரீதா் உட்பட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.