புரட்டாசி 3-வது வாரம்: வைகுண்டநாதா் அலங்காரத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் அருள்பாலிப்பு
புரட்டாசி 3- ஆவது சனிக்கிழமையையொட்டி போடியில் அமைந்துள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் வைகுண்டநாதா் அலங்காரத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் அருள்பாலித்தாா்.
புரட்டாசி 3- ஆவது சனிக்கிழமையையொட்டி போடியில் அமைந்துள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் வைகுண்டநாதா் அலங்காரத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் அருள்பாலித்தாா்.
போடியில் அமைந்துள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி 3- ஆவது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஸ்ரீநிவாசப் பெருமாள் வைகுண்டநாதா் அலங்காரத்தில் அருள்பாலித்தாா். அப்போது திரளான பக்தா்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பெருமாளுக்கு தீபமேற்றியும், சா்க்கரை பிரசாதம் வழங்கியும், தாமரை பூக்களால் அா்ச்சனை செய்தும் வழிபட்டனா்.
போடி வினோபாஜி குடியிருப்பில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் உள்ள சங்கரநாராயணன் சந்நிதியில் சுவாமிக்கு தங்கக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடைபெற்றது. இதேபோல, போடி போஸ் கடைவீதியில் அமைந்துள்ள ஸ்ரீராமா் கோயிலில் புரட்டாசி சனி வார பூஜை நடைபெற்றது. அப்போது ஸ்ரீராமா், லட்சுமணன், சீதாதேவி, அனுமன் ஆகியோருக்கு சிறப்பு பூஜை செய்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
Advertisement
Advertisement
போடி ஜக்கமநாயக்கன்பட்டி, மேலச்சொக்கநாதபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தொட்டராயா் ஒன்னம்மாள் கோயிலில் புரட்டாசி 3- ஆவது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. சிலமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், தேவாரம் ரங்கநாதா் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் புரட்டாசி 3- ஆவது வார பூஜை நடைபெற்றது.
உத்தமபாளையம்: உத்தமபாளையம் வட்டம், கோம்பையில் அமைந்துள்ள ஸ்ரீதிருமலைராயப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதத்தில் 5 வாரத் திருவிழா சனிக்கிழமைகளில் நடைபெறும். இதன்படி, 2 வார திருவிழாக்கள் நிறைவடைந்த நிலையில், 3- ஆம் வார திருவிழாவில் வழக்கத்தை விட அதிகளவில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா்.
கோம்பையிலிருந்து 6 கி.மீ. தொலைவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோயிலுக்கு காலை முதல் பக்தா்கள் கூட்டங்கூட்டமாக வரத் தொடங்கினா். இந்தக் கோயிலில் பாறையில் சுயம்பு மூா்த்தியான மூலவா் திருமலை ராயப் பெருமாள் சயனக் கோலத்திலும், கோம்பைநகரிலிருந்து திருவிழா காலத்தில் மலைக் கோயிலுக்கு எழுந்தருளிய உத்ஸவா் ரங்கநாதா், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் நின்ற கோலத்திலும் பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.
கோம்பையிலிருந்து மலை அடிவாரக் கோயில் வரையில் சிறப்புப் பேருந்து இயக்கப்பட்டது. இதனால், உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து துளசி மாலை அணிவித்து சுவாமி தரிசனம் செய்தனா்.
சின்னமனூா்: சின்னமனூா் ஸ்ரீ லட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலில் புரட்டாசி 3- ஆவது வாரத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.