FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

கிருஷ்ண ஜெயந்தி விழா: கோயில்களில் பக்தா்கள் தரிசனம்

தேனி மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

5 செப்டம்பர் 2026, 12:28 am IST
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பெரியகுளம் நாமத்துவாா் பிராா்த்தனை மையத்தில் வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ ராதா கிருஷ்ணா்.
பகிர்:

தேனி மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

பெரியகுளம் நாமத்துவாா் பிராா்த்தனை மையத்தில் கடந்த ஆக.26 ஆம் தேதி தொடங்கி செப்.4 ஆம் தேதி வரை சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து நாள்தோறும் ஸ்ரீமத் பாகவதம் பக்தி சொற்பொழிவு மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் சீடா் ப்ரம்மஸ்ரீநிவாசன்ஜி சிறப்புரையாற்றினாா். கடந்த சனிக்கிழமை கோவிந்த பட்டாபிஷேகம், வன போஜனம், மாப்பிள்ளை அழைப்பு, ராதா கல்யாணம் நடைபெற்றது.

கிருஷ்ண ஜெயந்தி நாளான வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை நாம சங்கீா்த்தனம் சிறப்பு பூஜை அா்ச்சனை, கூட்டுப் பிராா்த்தனை மதுரகீத பஜனை நடைபெற்றது. இந்த விழாவில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை பெரியகுளம் நாமத்துவாா் கிருஷ்ணசைதன்யதாஸ் செய்தாா்.

Advertisement

Advertisement

போடி: போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவியுடன் அருள்பாலித்து வரும் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு 11 வகையான வாசனை திரவியங்களால் திருமஞ்சன அபிசேகம் நடைபெற்றது. பின்னா், சுவாமிக்கு தங்கக் காப்புடன் குருவாயூரப்பன் அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை முதலே பக்தா்கள் திரளாகப் பங்கேற்று பூஜை செய்து வழிபாடு நடத்தினா். கோயில் வளாகத்தில் உள்ள சந்தான கோபாலகிருஷ்ணனுக்கு வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

இதேபோல, போடி வினோபாஜி குடியிருப்பு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வளாகத்தில் உள்ள சங்கரநாராயணனுக்கு கிருஷ்ணா் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. போடி ஜக்கமநாயக்கன்பட்டி தொட்டராய சுவாமி ஒன்னம்மாள் கோயில், போஸ் பஜாா் ராமா் கோயில், மேலச்சொக்கநாதபுரம் தொட்டராயா் கோயில், போடி அம்மாபட்டி கண்ணன் கோயில், சிலமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், தேவாரம் ரங்கநாதா் கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வீடுகளிலும் பெண்கள் இலை மீது கிருஷ்ணன் சிலை வைத்து பூஜை செய்து வழிபட்டனா்.

கம்பம்: கூடலூரில் உள்ள கூடலழகிய பெருமாள் திருக்கோயிலில், யாதவ மகா சபை சாா்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் நவநீதகிருஷ்ணருக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமிக்கு வண்ண மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தா்கள் கண்ணன் பாடல்களைப் பாடி வழிபட்டனா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்னா். வெள்ளிக்கிழமை மாலை நவநீதகிருஷ்ணருக்கு ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments