அரசுப் பேருந்து நடத்துநர் மீதான தாக்குதல்: கைதானவர்களை விடுவிக்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பேருந்தில் மாணவர்கள் மற்றும் நடத்துநரிடையே ஏற்பட்ட தகராறில் நடத்துநர் தாக்கப்பட்டார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரை விடுவிக்கக் கோரி, மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பேருந்தில் மாணவர்கள் மற்றும் நடத்துநரிடையே ஏற்பட்ட தகராறில் நடத்துநர் தாக்கப்பட்டார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரை விடுவிக்கக் கோரி, மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சங்கரப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் திருப்பதி (16). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை பள்ளி முடிந்து அரசுப் பேருந்தில் வந்துள்ளார். அப்போது, பூவானி விலக்கு அருகே இறங்க வேண்டும் என நடத்துநரிடம் மாணவர் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
அதற்கு நடத்துநர் முத்துப்பாண்டி அங்கு பேருந்து நிற்காது என தெரிவித்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் நடத்துநர் மாணவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கேட்ட பிரகாஷ் என்ற மாணவரைவும் நடத்துநர் தாக்கினாராம். அதன்பின், பூவானி விலக்கில் மாணவர்கள் இறங்கியபோது, நடத்துநரை மாணவர்கள் மற்றும் அங்கிருந்த சிலர் சேர்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, நடத்துநர் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து தங்கமாரிமுத்து, சவுந்தரராஜன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவரையும் விடுவிக்க வேண்டுமெனவும், வழக்கை நடத்துநர் வாபஸ் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி, பூவானி மற்றும் சங்கரப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரனிடம் மனு அளித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.