கருணாநிதி மறைவு: அனைத்துக் கட்சிகள் இரங்கல் ஊர்வலம்-மௌன அஞ்சலி
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி மறைவை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் புதன்கிழமை
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி மறைவை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் புதன்கிழமை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. பல்வேறு இடங்களிலும் அனைத்துக் கட்சிகள் சார்பில் இரங்கல் ஊர்வலம் மற்றும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விருதுநகரில் பல்வேறு இடங்களில் திமுக சார்பில், கருணாநிதி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதேபோல், விருதுநகர் கம்மாபட்டி பகுதியில் திமுகவைச் சேர்ந்த நான்கு பேர் மொட்டையடித்தனர்.
விருதுநகர் நகராட்சி அலுவலக பகுதியிலிருந்து பஜார் வழியாக தேசபந்து மைதானம் வரை திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கருப்புச் சட்டை அணிந்து அமைதி ஊர்வலம் நடத்தினர். சூலக்கரை பகுதியிலும் மவுன ஊர்வலம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் முழுவதுமஅசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாத வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார், செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை வரை தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சிவகாசி: சிவகாசியில் அனைத்துக் கட்சியின் சார்பில் இரங்கல் ஊர்வலம் நடைபெற்றது. சிவகாசி நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய இந்த ஊர்வலம், நகரின் ரதவீதி வழியே சென்று விஸ்வநாதர்-விசாலாட்சியம்மன்கோயில் முன்பு நிறைவடைந்தது. பின்னர் அங்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் பாண்டி, வெயில்ராஜ்(திமுக), அசன்பத்ரூதின்(அதிமுக), செல்வராஜ், சிவசுப்பிரமணியன்(மதிமுக), பாண்டியராஜ் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), கணேசன்(காங்கிரஸ்), முருகன், தேவா (மார்சிஸ்ட் கம்யூ.), ஜீவா, சமுத்திரம்(இந்திய கம்யூ.), ஈஸ்வரன்(ஆதித்தமிழர் பேரவை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் திமுக நகரச் செயலாளர் ஜி.ஜி.அய்யாவுப்பாண்டியன் தலைமையில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற மெளன ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் ராமகிருஷ்ணாபுரம் காமராஜர் சிலையில் தொடங்கி, தேரடி திடலில் நிறைவடைந்தது. இதில் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. வெ.பொன்னுப்பாண்டியன், சிவகாசி முன்னாள் மக்களவைத் தொகுதி உறுப்பினர் வெ.அழகிரிசாமி, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் பட்சிராஜா வி.சி.வன்னியராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் நகரின் 33 வார்டுகளிலும் திமுக கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, அதன்கீழ் திமுக தலைவர் கருணாநிதியின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு அந்தந்தப் பகுதி திமுக தொண்டர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.
அருப்புக்கோட்டை: நகரின் முக்கிய வீதிகளில் ஆங்காங்கே திமுகவினர் கருணாநிதி உருவப்படத்துடன் கூடிய பதாகைகள் வைத்திருந்தனர். உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டன.
சாத்தூர்: சாத்தூரில் புதன்கிழமை மாலை திமுக, அதிமுக, மதிமுக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட மௌன ஊர்வலம் நடைபெற்றது.
சாத்தூர் பேருந்து நிலையம் முன்பு தொடங்கிபிரதான சாலை, கிருஷ்ணன்கோவில், வெள்ளகரை சாலை வழியாக பழைய பூங்காவில் உள்ள நந்தவனம் வரை ஊர்வலம் சென்றது. பின்னர் நத்தவனத்தில் வைக்கபட்டிருந்த கருணாநிதியின் உருவப் படத்திற்கு அனைத்துக் கட்சியின் நிர்வாகிகளும் பொதுமக்களும் மௌன அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக சாத்தூர்,இருக்கன்குடி பகுதிகளைச் சேர்ந்த திமுகவினர் 20- க்கும் மேற்பட்டோர் முக்குராந்தல் பகுதியில் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தினர். சாத்தூர், ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை,தாயில்பட்டி மற்றும் ஏராளமான கிராம பகுதிகளிலும் கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.