தென்பாலை கிராமத்தில் சாலையைச் சீரமைக்க வலியுறுத்தல்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் தென்பாலை கிராமத்தில் சேதமடைந்த தார்ச்சாலையை சீரமைக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் தென்பாலை கிராமத்தில் சேதமடைந்த தார்ச்சாலையை சீரமைக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அருப்புக்கோட்டையிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தென்பாலை கிராமம். இக்கிராமத்தில் சுமார் 900 பேர் வசிக்கின்றனர். புலியூரான் ஊராட்சிக்கு உள்பட்ட இக்கிராமத்தில் தார்ச்சாலை சேதமடைந்து ஓரடி ஆழமுள்ள பள்ளங்களுடன் குண்டும், குழியுமாக மாறிவிட்டது. குறிப்பாக இக்கிராமத்திலிருந்து புலியூரான் கிராமம் வரையிலான சுமார் 2 கிலோ மீட்டர் தார்ச்சாலை அதிகமாகச் சேதமடைந்துள்ளது.
தார்ச்சாலை பெயர்ந்துவிட்டதால் கூர்மையான கற்களுடன் காணப்படும் இச்சாலை வாகன டயர்களைச் சேதமாக்குவது வாடிக்கையாகிவிட்டது. மேலும் அவசர சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளாலும், கர்ப்பிணிகளாலும் பேருந்திலோ அல்லது வாடகை வாகனங்களிலோ நிம்மதியாகச் செல்ல முடியாத அளவிற்கு அதிக அதிர்வுகள் ஏற்படுகின்றன. மேலும் தென்பாலை கிராமத்திலிருந்து அருகிலுள்ள பள்ளிகளுக்கு நாள்தோறும் சைக்கிளில் சென்றுவரும் பள்ளி மாணவர்கள் அடிக்கடி தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.
இந்த சாலையைச் சீரமைக்கக்கோரி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசுத்தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லையென கூறப்படுகிறது. பல ஆண்டுகளாகியும் இதற்குத் தீர்வு கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து உரிய நடவடிக்கை எடுத்து தென்பாலை கிராமச்சாலையைச் சீரமைக்க வேண்டும் என மீண்டும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.