சத்திரப்பட்டியிலிருந்து மதுரைக்கு அரசுப் பேருந்து இயக்க கோரிக்கை
விருதுநகர் மாவட்டம், சத்திரப்பட்டியிலிருந்து மதுரைக்கு வன்னியம்பட்டி வழியே அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சத்திரப்பட்டியிலிருந்து மதுரைக்கு வன்னியம்பட்டி வழியே அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அக்கட்சியின் விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் துள்ளுக்குட்டி புதன்கிழமை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:
பேண்டேஜ் துணி உற்பத்தியில் முன்னணியில் உள்ள சத்திரப்பட்டி பகுதியில் நூற்றுக்கணக்கான விசைத்தறிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் பேண்டேஜ் கொள்முதல் செய்வதற்கு வணிகர்கள் வந்து செல்கின்றனர்.
அதேபோல் பேண்டேஜ் துணிக்கான பண வசூலுக்கும், புதிய ஆர்டர் எடுக்கவும் சத்திரப்பட்டியை சேர்ந்த வணிகர்கள் தினமும் மதுரை செல்ல வேண்டியுள்ளது.
மேலும், இப்பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவ - மாணவிகள் ராஜபாளையம் சென்று பின்னர் மதுரை செல்ல வேண்டியுள்ளது.
இதனால் நேரம் மற்றும் பண விரயமாகிறது.
சத்திரப்பட்டியில் இருந்து ராஜபாளையம் செல்ல 5 கிலோ மீட்டரும், ராஜபாளையத்தில் இருந்து வன்னியம்பட்டி விலக்கு செல்ல 7 கிலோ மீட்டரும் என மொத்தம் 12 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது.
எனவே, கல்லூரி மாணவ-மாணவியர் மற்றும் வணிகர்கள் நலனை கருத்தில் கொண்டு இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான சத்திரப்பட்டியிலிருந்து வன்னியம்பட்டி வழியாக மதுரைக்கு நேரடி அரசுப் பேருந்து இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.