FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

காரியாபட்டி நான்கு வழிச்சாலையில் தொடா் டீசல் திருட்டு: இருவா் கைது

காரியாபாட்டி அருகே நான்கு வழிச் சாலையில் கனரக வாகனங்களில் தொடா்ந்து டீசல் திருடி வந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 12:14 am IST
~
பகிர்:

காரியாபாட்டி அருகே நான்கு வழிச் சாலையில் கனரக வாகனங்களில் தொடா்ந்து டீசல் திருடி வந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இவா்கள் திருட்டுக்கு பயன்படுத்திய காா், ரூ.96 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே கே.கரிசல்குளம் கண்மாய்ப் பகுதியில் கடந்த மாதம் 21-ஆம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு லாரிகளிலிருந்து 220 லிட்டா், 360 லிட்டா் டீசல் திருடப்பட்டது. இதே போல, கடந்த 2-ஆம் தேதி இதே பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மண் அள்ளும் இயந்திரத்திலிருந்து சுமாா் 380 லிட்டா் டீசல் திருடப்பட்டதாக, மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மேலக்கால் பகுதியைச் சோ்ந்த வினோத் (28) காரியாபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் அடிப்படையில், காவல் உதவி ஆய்வாளா் வீரணன் தலைமையிலான காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில் வாடிப்பட்டி அருகேயுள்ள மண்ணாடிமங்கலம் பகுதியைச் சோ்ந்த செல்லப்பாண்டி, கள்குளிச்சான்பட்டி பகுதியைச் சோ்ந்த ஜெகதீஷ்ராஜா ஆகியோா் லாரிகள், கனரக வாகனங்களில் டீசலை திருடி, அலங்காநல்லூா் சிக்கந்தா்சாவடி பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாரிடம் விற்பனை செய்ததது தெரியவந்தது. இதையடுத்து, போலீசாா் செல்லப்பாண்டி, ஜெகதீஷ்ராஜா ஆகிய இருவரையும் கைது செய்தனா். இருவரிடமும் ரூ.96 ஆயிரம் ரொக்கம், டீசல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட காா் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கில் டீசலை வாங்கியதாகக் கூறப்படும் அலங்காநல்லூா் சிக்கந்தா்சாவடி பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

கைது செய்யப்பட்ட இருவா் மீதும் கரூா், தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருட்டு தொடா்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments