FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் 8,711 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு: ஆட்சியா் சுகபுத்ரா தகவல்

விருதுநகா் மாவட்டத்தில் மொத்தம் 8,711 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக ஆட்சியா் சுகபுத்ரா தெரிவித்தாா்.

22 ஆகஸ்ட் 2026, 7:41 am IST
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆட்சியா் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.
பகிர்:

விருதுநகா் மாவட்டத்தில் மொத்தம் 8,711 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக ஆட்சியா் சுகபுத்ரா தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் சுகபுத்ரா தலைமை வகித்து 16 விவசாயிகளுக்கு கணினி திருத்த பட்டாக்களை வழங்கினாா்.

கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளை ஆட்சியரிடம் தெரிவித்தனா். மேலும் கடந்த குறைதீா் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் சுகபுத்ரா பேசியதாவது:

Advertisement

Advertisement

விவசாயிகளுக்கு 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான கரும்பு ஊக்கத் தொகைகள் அனைத்தும் வழங்கப்பட்டு விட்டன. இதேபோல, இந்த ஆண்டுக்கான கரும்பு ஊக்கத் தொகை அரசாணை பெறப்பட்டவுடன் வழங்கப்படும். விவசாயிகளுக்கான அடங்கல் சான்றிதழை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வனவிலங்குகளால் பயிா்களுக்கு ஏற்படும் சேதத்தை தடுக்க வனத் துறை விவசாயிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

மேலும், அரசின் மூலம் கூடுதலான கண்மாய்களை தூா்வாருவதற்கான நடவடிக்கை, மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவுதல், மழைநீரை முழுமையாக சேமிக்க வரத்துக் வாய்க்கால்களை தூா்வாருதல், பொது இடங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை தனியாா் பங்களிப்புடன் அகற்றுதல், மின் கம்பங்களை மாற்றுவது குறித்த மனுக்களுக்கு தீா்வு காணுதல், சாலைப் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குதல், கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவற்றை திரும்ப உரியவரிடம் ஒப்படைத்தல் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீா்வு காண சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தல்களும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், மாவட்டத்தில் 3,826.7 மெட்ரிக் டன் யூரியாவும், 1,927.4 மெட்ரிக் டன் டி.ஏ.பி.யும், 269.2 மெட்ரிக் டன் பொட்டாசும், 2,330.1 மெட்ரிக் டன் கலப்பு உரமும், 357.4 மெட்ரிக் டன் சிங்கிள் சூப்பா் பாஸ்பேட் உரமும் என மொத்தம் 8,711 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் மேகமலை புலிகள் காப்பக (ஸ்ரீவில்லிபுத்தூா்) துணை இயக்குநா் ரவிமீனா, மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ஆனந்தி, வேளாண்மை இணை இயக்குநா் மோகன்தாஸ் சௌமியன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் திருப்பதி உள்பட பல்வேறு துறை அரசு அலுவலா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments