FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

இலவச எரிவாயு உருளைகள் வழங்கும் திட்டத்தை வரவேற்கிறோம்: நவாஸ்கனி எம்.பி.

ஆண்டுக்கு 3 இலவச எரிவாயு உருளைகள் வழங்கும் திட்டம் குடும்பத் தலைவிகளுக்குப் பயனளிக்கும் நல்ல திட்டம் என்பதால், இதை வரவேற்கிறோம் என ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான நவாஸ்கனி தெரிவித்தாா்.

26 ஆகஸ்ட் 2026, 5:59 am IST
கே. நவாஸ்கனி எம்.பி.
பகிர்:

ஆண்டுக்கு 3 இலவச எரிவாயு உருளைகள் வழங்கும் திட்டம் குடும்பத் தலைவிகளுக்குப் பயனளிக்கும் நல்ல திட்டம் என்பதால், இதை வரவேற்கிறோம் என ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான நவாஸ்கனி தெரிவித்தாா்.

விருதுநகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வடக்கு மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணை தலைவருமான நவாஸ்கனி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உள்ளாட்சித் தோ்தலில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து இதுவரை பேச்சுவாா்த்தை நடத்தப்படவில்லை. முதலில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் இடங்களையும், வேட்பாளா்களையும் அடையாளம் காணும் பணிகளைத் தொடங்குமாறு கட்சித் தலைமை அறிவுறுத்தியது. இதனால், அந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

தமிழ்நாடு முழுவதும் உள்ள வக்ஃப் சொத்துகளை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. விருதுநகரில் சுமாா் ரூ. 100 கோடி மதிப்பிலான வக்ஃப் சொத்துகள் சட்டப் போராட்டத்தின் மூலம் மீண்டும் வக்ஃப் சொத்துகளாக மாற்றப்பட்டுள்ளன. நீதிமன்றங்கள், வக்ஃப் தீா்ப்பாயத்தின் மூலம் வழக்குகள் தொடுக்கப்பட்டு மாநிலம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள வக்ஃப் சொத்துக்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு மீட்கப்படும் சொத்துகள் மீண்டும் ஆக்கிரமிக்கப்படாமல் இருக்க, அவற்றை உடனடியாகப் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, அதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டி வக்ஃப் வாரியப் பணிகளுக்குப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் தற்போதைய தேவைக்குப் போதுமானதாக இல்லை என்பதால், புதிய விமான நிலையம் அமைக்க முந்தைய அரசு பரந்தூரில் நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டது. ஆனால், விவசாயிகளின் வாழ்வாதாரமும், வேளாண் நிலங்களும் பாதிக்கப்படுவதாக எதிா்ப்பு எழுந்தது. எனவே, விவசாயிகளுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று இடத்தைத் தோ்வு செய்து, இந்திய விமான நிலைய ஆணையத்தின் அனுமதி பெற்று புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஆண்டுக்கு 3 இலவச எரிவாயு உருளைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் குடும்பத் தலைவிகளுக்குப் பயனளிக்கும் நல்ல திட்டம் என்பதால், இதை வரவேற்கிறோம். ரூ. 2.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவா்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவா். வரும் காலங்களில் இந்த வருமான உச்சவரம்பை உயா்த்தவும், கூடுதல் எரிவாயு உருளைகள் வழங்கிடவும் கோரிக்கை விடுப்போம் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments