FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

அமாவாசை: சதுரகிரியில் பக்தா்கள் வழிபாடு

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் அமாவாசையையொட்டி, செவ்வாய்க்கிழமை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

Updated On : 15 ஜூலை 2026, 5:47 am IST
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு சென்ற பக்தா்கள் .
பகிர்:

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் அமாவாசையையொட்டி, செவ்வாய்க்கிழமை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் நேரக் கட்டுப்பாடு இன்றி பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தனா். கடந்த 2015-ஆம் ஆண்டு சதுரகிரி மலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடா்ந்து, அமாவாசை, பெளா்ணமி உள்பட மாதத்தில் 8 நாள்கள் மட்டும் பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

2019-இல் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு பக்தா்கள் மாலையில் தங்குவதற்கும், விலங்குகளைப் பலியிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டு, மலையேற நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பக்தா்கள் தினமும் சதுரகிரி மலையேறிச் சென்று வழிபாடு செய்து வந்தனா்.

உயா்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில், ஜூன் 22 முதல் பக்தா்கள் தினசரி மலையேறுவதற்குத் தடை விதிக்கப்பட்டு, அமாவாசை, பெளா்ணமி உள்ளிட்ட நாள்களில் மட்டும் சதுரகிரி செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி ஆனி மாத அமாவாசை, பிரதோஷ வழிபாட்டுக்காக ஜூலை 12 முதல் 15-ம் தேதி வரை பக்தா்கள் சதுரகிரி மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இதன்படி, செவ்வாய்க்கிழமை அமாவாசையை முன்னிட்டு, 6 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தா்கள் சதுரகிரி மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனா். மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூா்த்தி, 18 சித்தா்களுக்கு மாலை 6 மணிக்கு மேல் 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கோயில் செயல் அலுவலா் யுவராஜா, பரம்பரை அறங்காவலா் ராஜா பெரியசாமி ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளைச் செய்தனா்.

பக்தா் உயிரிழப்பு:தூத்துக்குடி கே.டி.சி நகரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (54). இவா் தூத்துக்குடியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூரை பூா்வீகமாக கொண்ட சுப்பிரமணி, ஆனி மாத அமாவாசை வழிபாட்டுக்கு சதுரகிரி கோயிலுக்கு நண்பா்களுடன் சென்றாா். செவ்வாய்க்கிழமை காலை தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேறிய போது, கோணத்தலவாசல் அருகே சென்ற போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தாா். அவரை மீட்டு அடிவாரத்தில் உள்ள மருத்துவ முகாமுக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா். அவரது உடல் கூறாய்வு செய்யப்பட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து சாப்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments