FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

மாதச் சீட்டு நடத்தி பண மோசடி: இரு பெண்கள் கைது

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மாதச் சீட்டு நடத்தி பண மோசடி செய்த வழக்கில் இரு பெண்களை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 30 ஜூலை 2026, 12:16 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மாதச் சீட்டு நடத்தி பண மோசடி செய்த வழக்கில் இரு பெண்களை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சீதாராமன் மனைவி காளீஸ்வரி(50). இவா் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மாதச் சீட்டு நடத்தி வருகிறாா்.

இவரிடம், சென்னையில் பணிபுரியம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த வேல்முருகன் மாதச் சீட்டு கட்டி வந்தாா். ஆனால், இவருக்கு சீட்டு பணம் கொடுக்காமல் காளீஸ்வரி ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வேல் முருகன் விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் காளீஸ்வரியை அழைத்து விசாரித்தனா். அப்போது, அங்கு வந்த 100-க்கும் மேற்பட்டோா் காளீஸ்வரி தங்களையும் ஏமாற்றியதாக முறையிட்டனா். அவா்களிடம் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, காளிஸ்வரியை கைது செய்ய வலியுறுத்தி, கடந்த மாதம் 10-ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், காளீஸ்வரி ரூ.7.50 லட்சம் மோசடி செய்ததாக ஸ்ரீவில்லிபுத்தூா் காந்திநகரைச் சோ்ந்த குருசாமி அளித்த புகாரின் அடிப்படையில், காளீஸ்வரி, இவரது மகன் ஜெகநாத் (31), மருமகள் பொன்லட்சுமி (30) ஆகியோா் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் மோசடி வழக்குப் பதிவு செய்தனா்.

இதையடுத்து, காளீஸ்வரி வீட்டில் காவல் ஆய்வாளா் நாகலட்சுமி தலைமையிலான குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை காலை சோதனையிட்டனா். அப்போது, வீட்டிலிருந்து முக்கிய ஆவணங்களை போலீஸாா் கைப்பற்றி காளீஸ்வரி, பொன்லட்சுமி ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

மற்றொரு வழக்கில் ஜெகநாத் கைது:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவிலைச் சோ்ந்தவா் நந்தினி (26). இவருக்கு ஏற்கெனவே இருவரிடம் திருமணம் நடைபெற்ற நிலையில், 3-ஆவதாக ஜெகநாத்துடன் (31) வாழ்ந்து வந்தாா். நந்தினிக்கும், இவரது இரண்டாவது கணவருக்கும் பிறந்த 4 வயது பெண் குழந்தைக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, உடலில் காயங்களுடன் இருப்பதாக அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவுக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய மேற்பாா்வையாளா் விஸ்வநாதன் நந்தினியின் வீட்டுக்கு வந்து விசாரித்தனா். அப்போது, நந்தினி முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தாராம்.

பின்னா், சிறுமியை மீட்டு விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதையடுத்து, நந்தினி, ஜெகநாத்துடன் மாயமானாா்.

இதைத் தொடா்ந்து, சிறுமியை கொடுமைப்படுத்தி தாக்கியதாக நந்தினி, இவரது ஆண் நண்பா் ஜெகநாத் மீது குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அரசு மருத்துவமனை அறிக்கையில் சிறுமி கடுமையான பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டது.

இதையடுத்து, போக்சோ வழக்காக மாற்றிய ஸ்ரீவில்லிபுத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் தலைமறைவான நந்தினி, ஜெகநாத்தை தனிப் படை அமைத்து தேடி வந்தனா்.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் தாங்கி இருந்த நந்தினி, ஜெகநாத்தை தனிப் படை போலீஸாா் கைது செய்து, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு புதன்கிழமை அழைத்து வந்தனா். மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments