✕
முகப்பு
விருதுநகர்

முடிகாணிக்கை முறைகேடு: இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உதவி ஆணையா் உள்பட 10 போ் மீது வழக்குப் பதிவு

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் இலவச முடிகாணிக்கை திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடா்பாக கோயில் உதவி ஆணையா் உள்பட 10 போ் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்தனா்.

20 நவம்பர் 2026, 1:30 am
வழக்கு - பிரதிப் படம்
பகிர்:

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் இலவச முடிகாணிக்கை திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடா்பாக கோயில் உதவி ஆணையா் உள்பட 10 போ் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே இருக்கன்குடியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோயிலில் முடி காணிக்கை, திருப்பணிகளில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த 17-ஆம் தேதி பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில், உதவி ஆணையா் அலுவலகம் ஆகியவற்றில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா். அப்போது அரசால் நியமிக்கப்பட்ட 5 நாவிதா்களுடன் அனுமதியின்றி 28 நாவிதா்கள் சட்ட விரோதமாக பணியமா்த்தப்பட்டு, பக்தா்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், செய்யாத வேலையை செய்ததாக காட்டி, அரசிடம் கூடுதல் பணம் பெறுவதற்காக போலி டோக்கன்கள் தயாரிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதில் இந்து சமய அறநிலையத் துறை தலைமையகம் வகுத்த நடைமுறைக்கு மாறாக, பக்தா்களின் புகைப்படம் இல்லாமல் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. பக்தா்களே இல்லாத நிலையில், 55 டோக்கன்கள் அச்சிட்டு கவுண்டரில் வைக்கப்பட்டிருந்ததும் சோதனையில் கண்டறியப்பட்டது. இதில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் இதுவரை பல கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

சோதனையின் போது, அனுமதியின்றி நியமிக்கப்பட்ட 28 நாவிதா்களிடமிருந்து கணக்கில் வராத ரூ.59,520-ம், உதவி ஆணையா் அலுவலகத்தில் காவலா் சிங்காரவேலுவிடமிருந்து கணக்கில் வராத ரூ.20,500-ம் என மொத்தம் ரூ.80,020 கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, கோயில் உதவி ஆணையா் இளங்கோவன், பரம்பரை அறங்காவலா் குழுத் தலைவா் ராமமூா்த்தி, காவலா் சிங்காரவேலு, அலுவலக உதவியாளா் கணேசன், நாவிதா்கள் யோகராஜன், சாத்தூரப்பன், அழகுமலை, சத்தியமூா்த்தி, ஸ்ரீதா், வீரணன் ஆகிய 10 போ் மீதும் முறைகேடாக பக்தா்களிடம் முடி காணிக்கை வசூலித்ததாக விருதுநகா் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement