மாங்கனித் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள்: எஸ்.எஸ்.பி. ஆய்வு
காரைக்கால் மாங்கனித் திருவிழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கைலாசநாதர் கோயில், அம்மையார் கோயில் மற்றும்
காரைக்கால் மாங்கனித் திருவிழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கைலாசநாதர் கோயில், அம்மையார் கோயில் மற்றும் திருவிழா நடைபெறும் பல்வேறு இடங்களில் காரைக்கால் எஸ்.எஸ்.பி. திங்கள்கிழமை ஆய்வு நடத்தினார். பாதுகாப்புப் பணியில் 450 போலீஸார் ஈடுபடுவார்கள் எனவும் தெவித்தார்.
காரைக்காலில் மாங்கனித் திருவிழா 25 -ஆம் தேதி திங்கள்கிழமை தொடங்கி 28 -ஆம் தேதி வரை முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 26 -ஆம் தேதி திருக்கல்யாணமும், மாலை வெள்ளைச்சாற்று நிகழ்ச்சியும், 27 -ஆம் தேதி ஸ்ரீ பிச்சாண்டவர் வீதியுலாவும், மாங்கனி இறைப்பு, அமுதுபடையல் ஆகியவை பெரும்பான்மையான பக்தர்களை ஈர்க்கும் நிகழ்ச்சிகளாகும்.
பக்தர்கள் பெருமளவு குவியும் பகுதிகள், கோயில்களில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிடும் வகையில் காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால், கைலாசநாதர் கோயில், அம்மையார் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்றார்.
கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் குறித்து அறங்காவல் குழுவினர் காவல்துறை அதிகாரிக்கு விளக்கினர். ஒவ்வொரு நிகழ்விலும் எவ்வளவு பக்தர்கள் கலந்துகொள்வர், எத்தனை மணி நேரம் நிகழ்ச்சிகள் நடைபெறும் போன்ற விவரங்களை ராகுல் அல்வால் கேட்டறிந்தார். காவல் ஆய்வாளர் மரியகிறிஸ்டின் பால் அவருக்கு விளக்கம் அளித்தார்.
காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் காவலர்கள் முழுமையாக மாங்கனித் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். பிச்சாண்டவர் புறப்பாட்டை காலத்தோடு தொடங்கி, குறித்த நேரத்தில் அம்மையார் கோயிலுக்கு செல்லும் வகையில் ஏற்பாடுகளை அமைத்துக்கொள்ளவேண்டும். அமுதுபடையல் நிகழ்ச்சியிலும், பிச்சாண்டவர் வீதியுலாவின்போது பக்தர்கள் திரளாக பங்கேற்பார்கள் என்பதால், தரிசனத்தில் பக்தர்களை குறிப்பிட்ட அளவாக பிரித்து, பிரித்து அனுப்ப வேண்டும் என அறங்காவல் வாரியத்தினரிடம் எஸ்.எஸ்.பி. அறிவுறுத்தினார்.
பிச்சாண்டவருக்கு பவழக்கால் சப்பரத்தில் நடைபெறும் பூஜைகளை வெகுவாக எளிமைப்படுத்தியிருப்பதாகவும், பக்தர்கள் அதிகளவு வருவதால் தவிர்க்க முடியவில்லை. நிகழாண்டு அதில் சில மாற்றங்களை செய்திருப்பதால் இரவு 7.30 மணிக்குள் வீதியுலா நிறைவுபெற்று அமுதுபடையலுக்கு சுவாமி அம்மையார் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டுவிடும் என அறங்காவல் வாரியத்தினர் தெரிவித்தனர்.
திருவிழா நடக்கும் ஒவ்வொரு பகுதியையும் கண்காணிக்க காவல்துறை அதிகாரிகள் தனித்தனியாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவரவர்களை தொடர்புகொள்ள ஏதுவாக சிறப்பு மையம் அமைக்கப்படும். பக்தர்கள் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவத்தை அளித்து காவல்துறையினர் பணியாற்றுவார்கள். பாதுகாப்புப் பணியில் 450 போலீஸார் பணியமர்த்தப்படுவார்கள். அனைத்துத் தரப்பினரும் திருப்தியடையும் வகையில் காவல்துறையின் பணி இருக்கும் என அவர் தெரிவித்தார்.
போலீஸ் வட்டாரத்தில் கூறும்போது, பக்தர்கள் விலைமதிப்பு மிக்க ஆபரணங்கள் அதிகமாக அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும். அணிந்திருக்கும் ஆபரணங்களை மிகவும் பாதுகாப்பாக காத்துக்கொள்ள வேண்டும். 40 இடங்களில் கண்காணிப்பு கேமரா வைக்கப்படிருக்கிறது. எனினும், வழிப்பறியில் மிகவும் திறமை மிக்கவர்கள் பக்தர்களோடு ஊடுருவ வாய்ப்பிருப்பதால், பக்கர்கள் தரப்பில் மிகுந்த கவனம் வேண்டும். காவல்துறையினர் தீவிரமாக கண்காணிப்பில் இருந்தாலும், பக்தர்களின் ஒத்துழைப்பும் அவசியம் என கேட்டுக்கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.