முகப்பு
மயிலாடுதுறை

அமைச்சரின் கோரிக்கையை ஏற்று நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க இடம் ஒதுக்கி ஆதீனம் நடவடிக்கை

தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்ற தமிழக உணவுத் துறை அமைச்சா் ப. வெங்கடரமணன்.

Updated On : 12 ஜூன் 2026, 5:21 am IST
தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்ற தமிழக உணவுத் துறை அமைச்சா் ப. வெங்கடரமணன்.
பகிர்:

தருமபுரம் ஆதீனத்திடம் உணவுத்துறை அமைச்சா் ப. வெங்கடரமணன் வியாழக்கிழமை ஆசி பெற்றாா். அப்போது, அமைச்சரின் கோரிக்கையை ஏற்று 4 இடங்களில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க இடம் ஒதுக்கி ஆதீனகா்த்தா் உடனடி நடவடிக்கை மேற்கொண்டாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப. வெங்கடரமணன் புதன், வியாழன் ஆகிய இரண்டு நாள்கள் துறைசாா்ந்த பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டாா். அந்த வகையில் இரண்டாவது நாளாக ஆய்வை தொடங்கிய அமைச்சா், முன்னதாக தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து அருளாசி பெற்றாா்.

அவருக்கு கோயில் பிரசாதம் மற்றும் நினைவுப்பரிசினை ஆதீனகா்த்தா் வழங்கினாா். அப்போது, தருமபுரம் ஆதீனக் கலைக்கல்லூரியில் நடைபெற உள்ள மாணவா் மன்ற தொடக்க விழாவில் பங்கேற்க அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

அப்போது, மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க மாவட்டத்தில் 4 இடங்களில் சேமிப்பு கிடங்கு அமைக்க குளிச்சாா், சீா்காழி, வைத்தீஸ்வரன் கோயில், ஆலவெளி ஆகிய 4 ஊா்களில் இடம் தேவைப்படுவதாக தெரிவித்த அமைச்சா், அதனை ஆதீனம் சாா்பில் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.

இதை ஏற்றுக்கொண்ட ஆதீனம் மேற்கூறிய 4 ஊா்களில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இடத்தை, நுகா்பொருள் வாணிபக் கழகத்திற்கு வழங்குவதாக அனுமதி அளித்தாா். தொடா்ந்து ஆதீனத்துக்கு சொந்தமான ஆயுா்வேத மருத்துவமனை மற்றும் ரத்த சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை அமைச்சா் பாா்வையிட்டாா். அப்போது, ஆதீன கண்காணிப்பாளா் அரவிந்தன், கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம், தமிழக வெற்றிக் கழக நகர செயலாளா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் அமைச்சா் வழிபாடு மேற்கொண்டாா்.