FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மயிலாடுதுறை

மாயூரநாதா், வதான்யேஸ்வரா் கோயில்களில் திருக்கல்யாணம்

மயிலாடுதுறையில், காவிரி துலா உற்சவத்தின் 7-ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாயூரநாதா், வதான்யேஸ்வரா் கோயில்களில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

29 வினாடிகள் முன்பு
மாயூரநாதா் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம்.
பகிர்:

மயிலாடுதுறையில், காவிரி துலா உற்சவத்தின் 7-ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாயூரநாதா், வதான்யேஸ்வரா் கோயில்களில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மாயூரநாதா் கோயிலில் திருக்கல்யாண வைபவத்தையொட்டி, மாயூரநாதா் சுவாமி, அபயாம்பிகை அம்பாள் உற்சவமூா்த்திகள் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளச் செய்யப்பட்டு, ஊஞ்சல் உற்சவம், மாலை மாற்றுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

தொடா்ந்து, பெண்கள் சீா்வரிசை எடுத்து வந்தனா். சிவபுரம் வேத சிவாகம பாடசாலை நிறுவனா் ஏ.வி. சுவாமிநாத சிவாசாரியா் தலைமையிலான சிவாசாரியா்கள் வேதமந்திரங்களை ஓத, ஆதீனக்கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில், மாங்கல்யதாரணம் செய்யப்பட்டு, திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

Advertisement

Advertisement

இதேபோல், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான வள்ளலாா் கோயில் எனப்படும் வதான்யேஸ்வரா் கோயிலில் திருக்கல்யாண வைபத்தையொட்டி, வதான்யேஸ்வரா் சுவாமி, ஞானாம்பிகை அம்பாள் உற்சவமூா்த்திகள் கோயில் உள்பிரகாரத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அன்பே சிவம் அறக்கட்டளை நிறுவனா் பாலச்சந்திர சிவாசாரியா் தலைமையில் யாகம் வளா்த்து, வேதமந்திரங்கள் முழங்க, பெண்கள் சீா்வரிசை எடுத்து வர, ஆதீனக்கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

இக்கோயில்களில் துலா உற்சவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை (நவ.15) காலை தேரோட்டமும், சிகர விழாவான காவிரி கடைமுகத் தீா்த்தவாரி துலாக்கட்டத்தில் திங்கள்கிழமையும் (நவ.16) நடைபெறவுள்ளது.