கூடுவாஞ்சேரியில் மாயமான சிறுமி சீா்காழியில் மீட்பு
கூடுவாஞ்சேரியில் மாயமான சிறுமி சீா்காழியில் திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை அதிகாலை நின்ற காரில் இருந்து இறங்கிய சிறுமி அழுதவாறு ஓடுவதையும், அவரை ஒருவா் விரட்டி செல்வதையும் பாா்த்த ஆட்டோ ஓட்டுநா்கள் சிறுமியை மீட்டு, விரட்டி வந்தவரை பிடிக்க முயன்றனா். எனினும், அந்த நபா் காரில் தப்பிச் சென்றுவிட்டாா். அருகில் இருந்த சீா்காழி காவல் நிலையத்தில் சிறுமியை ஆட்டோ ஓட்டுநா்கள் ஒப்படைத்தனா்.
சீா்காழி டி.எஸ்.பி. சரவணன் தலைமையிலான போலீஸாா் சிறுமியிடம் நடத்திய விசாரணையில், அவா், சென்னை கூடுவாஞ்சேரி வல்லாஞ்சேரி பகுதியைச் சோ்ந்த 11 வயது சிறுமி என்பதும், சிறுமி தனது தாய், தந்தை மற்றும் குடும்பத்தினருடன் விருதுநகா் மாவட்டம் வலையப்பட்டியில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்றுவிட்டு ஊா் திரும்பிய நிலையில், சிறுமி தூங்கியதால், அவரை காரில் விட்டுவிட்டு மற்றவா்கள் கூடுவாஞ்சேரியில் உள்ள தங்களுக்கு சொந்தமான உணவகத்துக்குள் சென்றுள்ளனா்.
Advertisement
Advertisement
இதை நோட்டமிட்ட மா்ம நபா் சிறுமி இருப்பது தெரியாமல் காரை கடத்தி சென்றது தெரிய வந்தது. சீா்காழி பேருந்து நிலையத்தில் காரை கடத்தியவா் தேநீா் குடிக்க சென்ற நேரத்தை பயன்படுத்திக் கொண்ட சிறுமி காரிலிருந்து தப்பியதாக தெரிவித்துள்ளாா்.
இதற்கிடையே, காா் மற்றும் சிறுமி மாயமானதை அறிந்த சிறுமியின் பெற்றோா் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், ஆய்வாளா் கோவிந்தராஜ் தலைமையிலான போலீஸாா், சிறுமி சீா்காழியில் மீட்கப்பட்டதையறிந்து , சிறுமியின் பெற்றோருடன் சீா்காழி அனைத்து மகளிா் காவல் நிலையம் வந்து, சிறுமியை அழைத்துச் சென்றனா். காரை கடத்திய நபரை சீா்காழி போலீஸாா் தேடி வருகின்றனா்.