FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கூடுவாஞ்சேரியில் காருடன் கடத்தப்பட்ட சிறுமி சீர்காழியில் மீட்பு!

கூடுவாஞ்சேரியில் காருடன் கடத்தப்பட்ட சிறுமி சீர்காழியில் மீட்கப்பட்டது குறித்து....

16 நவம்பர் 2026, 10:37 am
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

கூடுவாஞ்சேரியில் காருடன் கடத்தப்பட்ட சிறுமி சீர்காழியில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கார் ஒன்று வந்து நின்றுள்ளது. அதிலிருந்து இறங்கிய சிறுமி அழுதவாறு ஓடி வந்ததையும், அந்தச் சிறுமியை ஒருவர் விரட்டி வந்ததையும் கண்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சிறுமியை மீட்டு, துரத்தி வந்தவரைப் பிடிக்க முயன்றபோது அவர் காரில் ஏறித் தப்பிச் சென்றுள்ளார். இதனை அடுத்து, எதிரே உள்ள சீர்காழி காவல் நிலையத்தில் சிறுமியை ஆட்டோ ஓட்டுநர்கள் ஒப்படைத்துள்ளனர். சீர்காழி டி.எஸ்.பி. சரவணன் தலைமையிலான போலீசார் சிறுமியிடம் நடத்திய விசாரணையில், அவர் கூடுவாஞ்சேரி வல்லாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

சிறுமி தனது தாய், தந்தை மற்றும் குடும்பத்தினருடன் விருதுநகர் மாவட்டம், வலையப்பட்டி கிராமத்தில் உள்ள குலதெய்வக் கோயிலுக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் சிறுமி தூங்கியதால் அவரைக் காரில் விட்டுவிட்டு, மற்ற அனைவரும் தங்களுக்குச் சொந்தமான உணவகத்தில் (ஹோட்டலில்) சாப்பிடச் சென்றுள்ளனர். காரின் என்ஜின் அணைக்கப்படாத (ஆஃப் செய்யப்படாத) நிலையில், இதனை நோட்டமிட்ட மர்ம நபர் உள்ளே சிறுமி இருப்பதை அறியாமல் காரைக் கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து சிறுமியிடம் மயிலாடுதுறை எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து எஸ்.பி. சினேகா பிரியா விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து, மயிலாடுதுறை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் சோதனைச் சாவடிகளுக்குத் (செக்போஸ்ட்) தகவல் அளித்து, காரையும் கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபரையும் பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, நேற்று இரவு 11 மணிக்குச் சிறுமி காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 10 மாவட்டப் போலீசாருக்குத் தகவல் அளித்து எச்சரிக்கப்பட்டதுடன், சிறுமியைத் தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டது.

மேலும், கூடுவாஞ்சேரி போலீசார் காரில் உள்ள ஃபாஸ்டேக் மூலமாகக் காரினைக் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், சீர்காழியில் சிறுமி காரில் இருந்து இறங்கி ஆட்டோ ஓட்டுநர்கள் உதவியுடன் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் அறிந்ததும், சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து விசாரணை செய்தனர். சீர்காழியில் சிறுமி மீட்கப்பட்ட தகவலறிந்த அவரது உறவினர்கள் சீர்காழிக்கு வந்துள்ளனர்.

Auto drivers rescued a young girl who got out of a car crying at the Sirkazhi new bus stand and handed her over to the police.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.