டாஸ்மாக் கடையை காலி செய்ய கோரி இடத்தின் உரிமையாளர் போராட்டம்
நாகை மாவட்டம், சீர்காழியில் தனக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி, இடத்தின் உரிமையாளர் கடையின் முன்பு சனிக்கிழமை தூக்கு கயிறுடன் தர்னாவில் ஈடுபட்டார்.
நாகை மாவட்டம், சீர்காழியில் தனக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி, இடத்தின் உரிமையாளர் கடையின் முன்பு சனிக்கிழமை தூக்கு கயிறுடன் தர்னாவில் ஈடுபட்டார்.
நாகை வடக்கு வீதியை சேர்ந்தவர் கோ. சரஸ்வதி (65). இவருக்கு சீர்காழி திருமஞ்சன வீதியில் 12 கடைகள் கொண்ட வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தின் கீழ்தளத்தில் ஒரு கடையில் டாஸ்மாக் கடை (கடை எண்.5626) கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. டாஸ்மாக் கடை இருப்பதால், வணிக வளாகத்தின் மற்ற கடைகளுக்கு யாரும் வாடகைக்கு வரவில்லையாம்.
இதனால், டாஸ்மாக் கடையை காலி செய்து தருமாறு சரஸ்வதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
Advertisement
Advertisement
சரஸ்வதி கோரிக்கையின்பேரில், அந்த கடையை சீர்காழி வட்டம், பெரம்பூர் பகுதிக்கு இடம் மாற்றம் செய்ய கடந்த 9-ம் தேதி ஆட்சியரகத்திலிருந்து உத்தரவு கடிதம் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடையை காலி செய்ய செப்டம்பர் 25-ம் தேதி வரை அவகாசம் தருமாறு சரஸ்வதியிடம் அதிகாரிகள் கேட்டிருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், குறிப்பிட்டப்படி கடையை அதிகாரிகள் காலி செய்யவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த சரஸ்வதி சனிக்கிழமை அதிகாலை 6 மணிக்கு தூக்கு கயிறுடன் கடையின் முன்பு அமர்ந்து கடையை திறக்ககூடாது எனக் கூறி தர்னாவில் ஈடுபட்டார்.
தகவலறிந்த சீர்காழி போலீஸார், சரஸ்வதியை காவல் நிலையம் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வரும் 2-ம் தேதிக்குள் டாஸ்மாக் கடையை காலி செய்துவிடுவதாக டாஸ்மாக் அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக போலீஸார் சரஸ்வதியிடம் கூறினர். இதையடுத்து, போராட்டத்தை சரஸ்வதி கைவிட்டார். காலை 11 மணிக்கு மேல் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.