FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

கொள்ளிடம் ஆற்றின் தடுப்புச் சுவரில் உடைப்பு: உடனடியாக சரி செய்யப்பட்டதால் 20 கிராமங்கள் வெள்ள அபாயத்திலிருந்து தப்பின

நாகை மாவட்டம், சீர்காழி அருகே அளக்குடியில் கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் தடுப்புச் சுவரில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட உடைப்பு

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 9:35 am IST
பகிர்:

நாகை மாவட்டம், சீர்காழி அருகே அளக்குடியில் கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் தடுப்புச் சுவரில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட உடைப்பு உடனடியாக சரி செய்யப்பட்டதால்,  20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ள அபாயத்திலிருந்து தப்பின.
கர்நாடகத்தில் பெய்துவரும் கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி, திறந்துவிடப்படும் உபரி நீர், மேட்டூர் அணைக்கு வந்து, அங்கிருந்து காவிரியில் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர், திருச்சி முக்கொம்பிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 2. 5 லட்சம் கன அடியாக திறந்து விடப்படுகிறது. இதனால், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் இருகரைகளையும் தொட்டப்படி பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றங்கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் கரைகளைத் தாண்டி ஊருக்குள் வெள்ள நீர் 
புகுந்துள்ளது.
இந்நிலையில், சீர்காழி அருகே உள்ள அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் தண்ணீர் திரும்பும் இடத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கான்கிரீட் தடுப்புச் சுவரின் ஒரு பகுதி ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்தது. இதுகுறித்து, தகவலறிந்த பொதுப் பணித் துறை அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் நிகழ்விடத்துக்கு விரைந்துவந்து உடைப்பை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். 5 லாரிகள் மூலம்  மணல் மற்றும் மண் எடுத்து வரப்பட்டு பொக்லைன் இயந்திரம் மூலம் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் கொட்டப்பட்டது. மேலும், மணல் மூட்டைகளை கொண்டும் அடைக்கப்பட்டது.
அப்போது, திடீரென கான்கிரீட் சுவரில் மேலும் 10 மீட்டர் நீளத்துக்கு உடைப்பு ஏற்பட்டது. இதனால், கரை உடையும் அபாயம் ஏற்பட்டதால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதையறிந்த அருகில் உள்ள கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியேறி கரையை நோக்கி ஒடி வந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார்  உடைப்பை உடனடியாக அடைக்க  உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து, கருங்கல் பாறைகள் கொண்டுவரப்பட்டு, பொக்லைன் இயந்திரம் மூலம் உடைப்பை அடைக்கும் பணி நடைபெற்றது. இப்பணியை  அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ஆட்சியர் சீ.சுரேஷ்குமார், எம்எல்ஏ பி.வி.பாரதி ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். 
இதற்கிடையில், கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் சோதனைச் சாவடி அருகிலும், குத்தவக்கரை என்ற இடத்திலும், முதலைமேடு மற்றும் நாதல்படுகை கிராமப் பகுதியிலும்  ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதிகளை பொதுப்பணித் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments