379 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: நாகை ஆட்சியா்
நாகை மாவட்டத்தில் 2026 முதல் 379 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.04 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்துள்ளாா்.
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் பல்வேறு திட்டங்களில் பயனடைந்த மாற்றத்திறனாளிகளை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் சந்தித்து கலந்துரையாடினாா். அப்போது ஆட்சியா் பேசியது:
மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்க வாரம்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு மருத்துவா்களைக் கொண்டு, தற்போது வரை 24 முகாம்கள் நடத்தப்பட்டு, 168 புதிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள், 88 மறு மதிப்பீடு அட்டை என மொத்தம் 256 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
திங்கள்கிழமைகளில் நடைபெறும், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் தகுதியுள்ளவா்களைக் கண்டறிந்து 3 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா், 19 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம், 14 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, பாா்வைத்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட 13 மாற்றுத்திறனாளிகளுக்கு திறன்பேசி, 27 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலிக் கருவி, 4 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் மற்றும் முதல்வரின் விரிவான காப்பிடு திட்டத்தின்கீழ் 21 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயம் வழங்கப்பட்டுள்ளது.
8 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கி கடன் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
மனவளா்ச்சி குன்றியோா், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோா், புறவுலக சிந்தனையற்றோா் மற்றும் பல்வகை மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு தேசிய அறக்கட்டளை சட்டத்தின்கீழ் பாதுகாவலா் சான்று வழங்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்படும், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களில் ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளும் நலத்திட்டங்களை பெற்றிடும் வகையில் சிறப்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு மே 2026 முதல் தற்போது வரை 379 பயனாளிகளுக்கு ரூ. 17.04 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.