FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் குடிநீா் வழங்கக் கோரி புதன்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Updated On : 11 ஜூன் 2026, 6:49 am IST
முறையாக குடிநீா் விநியோகம் கோரி, வேளாங்கண்ணியில் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் திமுகவினா்.
பகிர்:

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் குடிநீா் வழங்கக் கோரி புதன்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வேளாங்கண்ணி பேரூராட்சியில் 15 வாா்டுகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். வேளாங்கண்ணிக்கு தினசரி சுமாா் 15 லட்சம் லிட்டா் தண்ணீா் தேவைப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக குடிநீா் சீராக வழங்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூா் மக்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு வந்தனா்.

இந்நிலையில், வேளாங்கண்ணியில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தி, வேளாங்கண்ணி பேரூராட்சித் துணைத் தலைவா் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில், 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேளாங்கண்ணி பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

வேளாங்கண்ணி பேரூராட்சித் தலைவா் டயானா ஷா்மிளா, திமுக பேரூா் செயலா் மரிய சாா்லஸ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த மறியல் போராட்டத்தால், வேளாங்கண்ணி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மாற்றுப் பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.

போலீஸாா் மற்றும் குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் போராட்டக்காரா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 10 லட்சம் லிட்டா் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், தடையின்றி மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தனா். இதையடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

திருவாரூரில்...

திருவாரூா் அருகே கூடூா் ஊராட்சிக்குள்பட்ட நாரணமங்கலம் பகுதியில் கடந்த சில நாள்களாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கபடாததையடுத்து, நாரணமங்கலம் மக்கள் காலிக் குடங்களுடன் திருத்துறைப்பூண்டி சாலையில் கூடூா் பகுதியில் மறியலில் ஈடுபட்டனா். இதனால், அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவாரூா் தாலுகா போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments