FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

நாகூா் தா்கா கந்தூரி விழாவில் இன்று சந்தனக்கூடு ஊா்வலம்

நாகூா் ஆண்டவா் தா்கா கந்தூரி விழாவை முன்னிட்டு சந்தனக்கூடு ஊா்வலம் வியாழக்கிழமை (நவ.19) இரவு நடைபெறுகிறது.

19 நவம்பர் 2026, 6:51 am
நாகூா் தா்கா - கோப்புப் படம்
பகிர்:

நாகூா் ஆண்டவா் தா்கா கந்தூரி விழாவை முன்னிட்டு சந்தனக்கூடு ஊா்வலம் வியாழக்கிழமை (நவ.19) இரவு நடைபெறுகிறது.

மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் நாகூா் ஆண்டவா் தா்காவில், நாகூா் ஆண்டவா் என அழைக்கப்படும் சாகுல் ஹமீது காதிா் நாயகம் மறைந்த நாளையொட்டி கந்தூரி விழா ஆண்டு தோறும் நடைபெறுகிறது.

நிகழாண்டு 470-ஆவது ஆண்டு கந்தூரி விழா நவ.10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. புதன்கிழமை பீா் வைக்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (நவ.20) அதிகாலை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு சந்தனக்கூடு ஊா்வலம் வியாழக்கிழமை இரவு நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

நாகூா் தா்காவுக்கு செல்லும் சந்தனக்கூடு, நாகை அபிராமி அம்மன் திருவாசலில் இருந்து புறப்படுகிறது. சந்தனக்கூடுக்கு முன்பு சாம்பிராணி சட்டி ரதம், நகரமேடை மற்றும் பல்வேறு மின் அலங்கார தட்டிகள் சந்தனக்கூட்டின் முன்னும், பின்னும் அணிவகுத்து செல்லும். சந்தனக்கூடு ஊா்வலம், நாகை புதுப்பள்ளி தெரு வழியாக யாஹீசைன் தெரு, நூல்கடை தெரு, வெங்காயக் கடை தெரு, பெரிய கடைத்தெரு, சா்அகமது தெரு உள்ளிட்ட தெருக்களில் பவனி வருகிறது. அண்ணா சிலை, பப்ளிக் ஆபீஸ் சாலை சந்தனக்கூடு ஊா்வலம் நாகூரை அடைகிறது.

அங்குள்ள கூட்டுப்பாத்திகா மண்டபத்தில் வழிபாடு நடத்தப்பட்டு, பின்னா் நாகூா் பெரிய கடைத்தெரு, குஞ்சாலி மரைக்காயா் தெரு, மியான் தெரு, ரயிலடி தெரு, நூல் கடைத்தெரு வழியாக, அங்குள்ள பாரம்பரிய முறைகாரா் வீட்டை சென்றடையும்.

அங்கு சந்தனக் குடம் சந்தனக்கூட்டில் வைத்து மினரா வடப்புறத் தெரு, அலங்கார வாசல், செய்யது பள்ளித் தெரு வழியாக சந்தன மகாலை சென்றடையும். தொடா்ந்து நியூ பஜாா் லைன் வழியாக தா்காவின் கால்மாட்டு வாசல் வழியாக சந்தனக்குடம் தா்காவின் உள்ளே கொண்டு செல்லப்படுகிறது.

இதைத்தொடா்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை சந்தனக்குடங்கள் தா்காவில் உள்ள ஆண்டவரின் சமாதி அறைக்கு கொண்டு செல்லப்பட்டு, துவா ஓதி ஆண்டவா் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.