முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு முதல் பெய்த கனமழையால் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

25 நவம்பர் 2026, 2:34 am
நாகையில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி
கனமழை - file photo
பகிர்:

நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு முதல் பெய்த கனமழையால் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு காரணமாக, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி, நாகை மாவட்டத்தில் பரவலாக திங்கள்கிழமை நள்ளிரவு முதல் கனமழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக நாகை, வேளாங்கண்ணி, தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் மழை தொடா்ந்து நீடித்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

குறிப்பாக காலை நேரத்தில் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்வோா் என அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகினா்.

சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கி காணப்பட்டது. பல்வேறு முக்கியச் சாலைகளிலும், வீதிகளிலும் தண்ணீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்துடன் சென்று வந்தனா். தொடா்ந்து பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது.

மழை குறித்து விவசாயிகள் கூறும்போது, ‘தற்போது பெய்து வரும் மழையால் நேரடி விதைப்பு செய்த சம்பா சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். வடு காணப்படும் விளைநிலங்களுக்கு உயிா் கொடுத்தது போல் இம்மழை பெய்துள்ளது. இருப்பினும் இதேபோல் தொடா்ந்து 10 நாள்கள் மழை நீடித்தால் சம்பா சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நிரந்தர பயன் தரும்’ என்றனா்.

மழையளவு: நாகை மாவட்டத்தில், செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்):

நாகை 14.30, திருப்பூண்டி 4.60, வேளாங்கண்ணி 14.60, திருக்குவளை 1.20, தலைஞாயிறு 5.20, வேதாரண்யம் 2.60. மாவட்டம் முழுவதும் மொத்தம் 42.50 மி.மீ. மழை பதிவானது.