அஞ்சல் காப்பீட்டுத் திட்டத்தில் சேவை குறைபாடு: இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்ட சேவை குறைபாட்டுக்காக கூலி விவசாயத் தொழிலாளிக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க திருவாரூர் நுகர்வோர் குறைதீர் மன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்ட சேவை குறைபாட்டுக்காக கூலி விவசாயத் தொழிலாளிக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க திருவாரூர் நுகர்வோர் குறைதீர் மன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
நாகை மாவட்டம், திருக்குவளை தாலுக்கா, மாராச்சேரியை சேர்ந்த கூலித் தொழிலாளியான ராஜசேகர், பாமணி அஞ்சல் அலுவலகத்தில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து தன்னுடைய பெயரிலும் மற்றும் மனைவி பெயரிலும் காப்பீட்டிற்காக 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பிரிமியம் செலுத்தி வந்தார். பிரிமியத் தொகையான ரூ. 9,164 பெற்றுக்கொண்ட பாமணி அஞ்சல் அலுவலகம் மற்றும் திருத்துறைப்பூண்டி தலைமை அஞ்சலக நிர்வாகிகள், அதற்கான பத்திரம் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தனராம்.
ஓராண்டுக்கு பிறகு அடுத்த ஆண்டுக்கான பிரிமியம் செலுத்த சென்றபோது, பிரிமியம் வாங்க மறுத்ததுடன் காப்பீடு செய்யப்படவில்லையென அலுவலர்கள் கூறியுள்ளனர். இதில், அதிர்ச்சியடைந்த ராஜசேகர், நுகர்வோர் பாதுகாப்பு மையம் மூலம் அஞ்சல்துறை தலைவருக்கு புகார் அளித்தார். அப்புகார் மீது விசாரணை மேற்கொண்ட பட்டுக்கோட்டை அஞ்சல்துறை கண்காணிப்பாளர் நிதியாண்டு கடந்து பிரியம் பெறப்பட்டதால் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க முடியவில்லை என்றும், உரிய விண்ணப்பம் அளித்து பாமணி அலுவலகத்தில் செலுத்திய ரூ.9164 ஐ பெற்றுக்கொள்ள அறிவுறுத்தினாராம்.
இதையடுத்து அஞ்சல் துறையின் கவனக்குறைவால் ஏற்பட்ட இழப்புக்கு திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் 2017-இல் ராஜசேகர் வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் மன்ற நீதிபதி எம். நசீர் அஹமது பாதிக்கப்பட்ட ராஜசேகருக்கு அஞ்சல் துறை ரூ.9164-ஐ செலுத்திய தேதியிலிருந்து தொகை கொடுக்கும் நாள் வரை 12 சதவீத வட்டியுடன் சேர்த்து ரூ. 50 ஆயிரம் அஞ்சல் துறையின் சேவை குறைபாடு இழப்பீட்டுக்காகவும், வழக்கு செலவுக்காக ரூ. 2,500 ஆகியவையும் கொடுக்க வேண்டும் என புதன்கிழமை உத்தரவிட்டார். இத்தொகையை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும், தவறினால் இழப்பீட்டுத் தொகை ரூ.50,000 க்கு புகார் மனுத் தாக்கல் செய்த தேதியிலிருந்து தொகை முழுவதும் செலுத்தும் நாள் வரை 12 சதவீத வட்டியுடன் அஞ்சல் துறை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.