FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சாலையில் குப்பைத்தொட்டி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி

திருவாரூர் நேதாஜி சாலையில் ஆக்கிரமிப்பு காரணமாக சாலை ஓரத்தில் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

திருவாரூர் நேதாஜி சாலையில் ஆக்கிரமிப்பு காரணமாக சாலை ஓரத்தில் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியுள்ளது.
  திருவாரூர் நேதாஜி சாலையில் திரையரங்கம், வணிக நிறுவனங்கள், கோயில், கிறிஸ்தவ ஆலயம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் ஆண்டாள் தெருவாக இருந்து பின்னர் நேதாஜி சாலையாக மாற்றப்பட்டது. தற்போது அந்த சாலை முழுவதும் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளதால், எப்போதும் பரபரப்பு நிறைந்ததாகவே இருக்கும். பெரிய நிறுவனங்கள் தங்களுக்கான பொருள்களைக் கொள்முதல் செய்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களில் கொண்டு வந்து கடைமுன் நிறுத்தி இறக்குவது தினசரி நடவடிக்கை ஆகும். அந்தக் கடைகளின் முன்பு வாகனங்கள் நிறுத்த தனி இடமில்லை என்பதால், சாலை ஓரத்திலேயே நிறுத்தி இறக்குவது வழக்கம். இதனால் நேதாஜி சாலையானது பெரும்பாலான நேரங்களில் பரபரப்பாகவே காணப்படும்.
இந்நிலையில் இங்குள்ள வணிக நிறுவனங்களின் உரிமை யாளர்கள், தங்கள் கடை தொடக்கத்திலிருந்து சாலை வரை சிமென்ட்டால் மேடை போல அமைத்துக் கொள்கின்றனர். இவை சாலையைக் காட்டிலும் சில அங்குலம் உயரமாக உள்ளன. மேலும், கடையிலிருந்து சாலை வரை சறுக்கலாக அமைத்துக் கொள்கின்றனர். இதனால், அந்தக் கடைகளின் முன்னால் வாகனங்களை நிறுத்த முடிவதில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், போக்குவரத்து நெரிசலின்போது எதிரெதிரே வரும் வாகனங்கள் விலக முடியாத தர்மச்சங்கடமான நிலையையும், இந்த ஆக்கிரமிப்புகள் ஏற்படுத்துகின்றன.
இதேபோல் நேதாஜி சாலையில் உள்ள தேவாலயத்தின் முன்பு மேடை போல அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் உள்ள கடையிலும் மேடை அமைப்பில் சிமென்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தேவாலயத்தின் அருகில் வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டி, வைக்க இடமில்லாமல் சாலை ஓரத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் நேதாஜி சாலை, அந்த இடத்தில் ஒத்தையடி பாதை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 
சில மாதங்களுக்கு முன் அங்கு குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. இதனால் நகராட்சி சார்பில் அங்கு கோலங்கள் வரையப்பட்டு, குப்பை கொட்டுவது தடுக்கப்பட்டது. பின்னர், கோலங்கள் போடும் பணி நிறுத்தப்பட்டது. எனினும், குப்பைகளைக் கொட்டுவதைத் தடுக்கும் வகையில், அந்த இடத்தில் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டது. ஆனால், தற்போது சாலைக்கு வந்த குப்பைத் தொட்டியால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், குப்பைகளும் சாலை ஓரத்திலேயே
கொட்டப்படுகின்றன.
இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடுமையாக அவதியுறுகின்றனர். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, இந்தக் குப்பைத் தொட்டியை அதற்கான இடத்தில் வைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments