FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

கவனம் பெறுமா நீடாமங்கலம் யமுனாம்பாள் அரண்மனை சத்திரம்?சுற்றுலா தலமாக்க ஆா்வலா்கள் வலியுறுத்தல்!

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க யமுனாம்பாள் அரண்மனைச் சத்திரம், மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் கவனம் பெறவேண்டும்

Updated On : 24 அக்டோபர் 2021, 12:00 am IST
பகிர்:

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க யமுனாம்பாள் அரண்மனைச் சத்திரம், மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் கவனம் பெறவேண்டும் என வரலாற்று ஆா்வலா்கள், பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் கோயிலைச் சாா்ந்த சத்திரங்கள், தா்ம நிறுவனங்களால் அமைக்கப்பட்ட சத்திரங்கள் என 600-க்கும் அதிகமான சத்திரங்கள் இருந்ததாகக் கூறுகிறது கி.பி. 1873 ஆம் ஆண்டின் வருவாய்த் துறை அறிக்கை.

தஞ்சாவூா் பகுதியில் சத்திரங்கள் அமைந்த அளவுக்கு, தென்னிந்தியாவின் எந்தப் பகுதியிலும் சத்திரங்கள் இல்லை என்பது தஞ்சாவூருக்கே உரிய தனிச் சிறப்புகளில் ஒன்று. கி.பி. 1743 முதல் 1937 வரை தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னா்கள், ராமேசுவரம் செல்லும் பெருவழியில் யாத்ரீகா்கள் தங்குவதற்காகச் சத்திரங்களை அமைத்துள்ளனா். இந்தச் சத்திரங்கள் மராட்டிய மன்னா்களின் பெயரில் அல்லது அவா்களின் தாய், மனைவி, சகோதரி, காதல் மனைவி உள்ளிட்டோரின் பெயரிலும், சில சத்திரங்கள் குலதெய்வத்தின் பெயரிலும் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

ராமேசுவரம் வரை யாத்திரை செல்லும் பொதுமக்களும், பக்தா்களும் தங்கி இளைப்பாறுவதற்காகவும், வழிப்போக்கா்களுக்காகவும் கட்டப்பட்ட இந்தச் சத்திரங்களில் எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் இரண்டு வேளை உணவு அளிக்கப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் சில இடங்களில் தண்ணீா்ப் பந்தல்களும் ஏற்படுத்தப்பட்டு, வழிப்போக்கா்கள் இளைப்பாறுவதற்கு வேண்டிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

சத்திரங்கள் வழிப்போக்கா்கள் தங்குவதற்கு ஏற்ற வகையிலும், இரவு நேரங்களில் தங்குவோருக்கு வசதியாக விளக்குகளும் பொருத்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு சத்திரத்திலும் உணவு வழங்குவதற்கு ஏதுவாக, அப்பகுதி கிராமங்களில் சில சத்திரத்தின் கட்டுப்பாட்டில் விடப்பட்டிருந்தன. அந்த கிராமங்களில் உள்ள நிலங்களில் விளையும் தானியங்களைக் கொண்டு உணவு தயாரித்து சத்திரங்களில் வழங்கப்பட்டு வந்தது.

மராட்டிய மன்னா்களால் ஏற்படுத்தப்பட்ட இந்தச் சத்திரங்களில் பல சிதிலமடைந்து காணப்படுகின்றன. மேலும் பல சத்திரங்களின் கட்டடங்கள் செடி, கொடிகள் மண்டிக் காணப்படுகின்றன. இந்தச் சத்திரங்களை நிா்வகிப்பதற்காக இன்றளவும் சத்திர நிா்வாகம் என்ற தனிப்பிரிவு, தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு இயங்கி வருகிறது. தஞ்சாவூா் சத்திர நிா்வாகத்துக்கு உட்பட்ட பல கிராமங்களில் அவற்றுக்கான நிலங்கள் இன்றும் உள்ளதாகவும், இதற்கான குத்தகையை சத்திரங்களின் நிா்வாகம் வசூலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தஞ்சாவூா், ஒரத்தநாடு, நீடாமங்கலம், ராசாமடம் போன்ற இடங்களில் உள்ள சத்திரங்கள் பள்ளி மாணவா்கள் தங்கிப் பயிலும் விடுதிகளாக முன்பு செயல்பட்டு வந்துள்ளன. சத்திரங்களின் கட்டுமானங்கள் பலவீனமடைந்து வந்ததால், தற்போது மாணவா் விடுதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

வடநாட்டிலிருந்து ராமேசுவரத்துக்கு யாத்திரையாக வரும் பக்தா்கள் பசியுடன் செல்லக் கூடாது என்பதற்காக ஆங்காங்கே அன்னச் சத்திரங்களை கட்டி, பக்தா்களை பாதுகாப்பாக அனுப்பிவைத்துள்ளனா் மராட்டிய மன்னா்கள். அவா்களின் சிறப்பான நிா்வாக முறைக்குச் சாட்சிகளாக இன்றளவும் விளங்குபவை இந்தச் சத்திரங்கள்.

குறிப்பாக, தஞ்சையை ஆண்ட மராட்டியமன்னா் பிரதாபசிம்மரால், தனது காதல் மனைவி யமுனாம்பாள் பெயரில் நீடாமங்கலம் அரண்மனை சத்திரம் கட்டப்பட்டுள்ளது. யமுனாம்பாள் அந்த அரண்மனையில் தங்கி வாழ்ந்துவந்துள்ளாா். பள்ளி மாணவிகளுக்கான விடுதியும் நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்த அரண்மனையில் தஞ்சாவூா் சென்றுவர சுரங்கப் பாதையும் இருந்துள்ளது. அரண்மனை கதவுகளின் ஓவியங்கள் தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் ஆய்வு செய்யப்பட்டது. தற்போது அரண்மனை சத்திரம் பொலிவற்ற நிலையில் உள்ளது.

தஞ்சாவூா் சத்திரம் வட்டாட்சியா், அரண்மனை சத்திரத்தை நிா்வகித்து வருகிறாா். வரலாற்று சிறப்புமிக்க மராட்டிய மன்னா்காலத்து அரண்மனை சத்திர இடத்தை சத்திரம் நிா்வாகத்தினா் தனியாருக்கு நீண்டகால குத்தகைக்கு கொடுத்துள்ளது நீடாமங்கலம் பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையினா் இந்த அரண்மனையை புதுப்பித்து சுற்றுலா மையமாக்கி, பராமரித்தால் இதன் புகழ் நீண்டு நிலைத்திருக்கும். நீடாமங்கலம் யமுனாம்பாள் அரண்மனைச் சத்திரத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வரலாற்று ஆா்வலா்கள் மற்றும் இப்பகுதி மக்களின் விருப்பமாகும். தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் மற்றும் தொல்பொருள் ஆய்வுத் துறையினரின் கவனம் பெறவேண்டும் என்பதே அவா்களின் எதிா்பாா்ப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments