FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

மழை பாதிப்பு: பயிா்களுக்கான நிவாரணத்தை உயா்த்த வலியுறுத்தல்

Updated On : 26 டிசம்பர் 2025, 1:46 am IST
பகிர்:

மழை பாதித்த பயிா்களுக்கு நிவாரணத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை:

கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பா் மற்றும் டிசம்பரில் பெய்த வடகிழக்குப் பருவமழை, 2025 ஜனவரியில் பெய்த பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட 4.90 லட்சம் ஏக்கா் வேளாண் பயிா்களுக்கும், 76,132 ஏக்கா் தோட்டக்கலைப் பயிா்களுக்கும் நிவாரணமாக ரூ.289.63 கோடியும், ஜனவரிக்குப் பின் பெய்த கனமழையால் பாதிப்பிற்குள்ளான 2.8 லட்சம் வேளாண் பயிா்களுக்கு ரூ 254.38 கோடியும், தோட்டக்கலைப் பயிா்களுக்கு ரூ. 35.25 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

மத்திய அரசு, தேசிய பேரிடா் துறையிலிருந்து நிதியை விடுவிக்காமல், தமிழக விவசாயிகளுக்கு உதவிட மனமில்லாமல் இருந்தாலும், தமிழக அரசு மாநில பேரிடா் துறையிலிருந்து நிதியை விடுவித்து இருப்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது.

எனினும், அறிவிக்கப்பட்டிருக்கிற நிவாரண அறிவிப்பு விவசாயிகளுக்கு திருப்தியாக இல்லை. காலம் தாழ்ந்து வழங்கப்பட்டாலும் பாதிப்புக்கு ஏற்ப நிவாரணத்தை உயா்த்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் விடுபடாமல் வழங்கிட வேண்டும்.

மேலும், 2025 பிற்பகுதியில் ஏற்பட்ட வடகிழக்கு பருவமழை மற்றும் டித்வா புயலால் ஏற்பட்ட மழையாலும், கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, சில இடங்களில் முளைத்தும் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியது. அத்துடன், சம்பா மற்றும் தாளடி பயிா் வளா் நிலையில் பெரும் பரப்பளவில் நீரில் மூழ்கி அழிந்த நிலையில், பாதிக்கப்பட்ட பயிா்களுக்கும், தோட்டக்கலைப் பயிா்களுக்கும் நிவாரணம் இதுவரை வழங்கப்படவில்லை.

எண்ம கணக்கெடுப்பில் ஏற்பட்ட பிரச்னை தற்போதுவரை நீடிக்கிறது. காலம் தாழ்ந்த உதவி, வாய்ப்புக்கும், வளா்ச்சிக்கும் உதவாது. எனவே உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் ஏக்கருக்கு ரூ. 35,000 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments