மா சாகுபடி: அதிக மகசூல் பெற கவாத்து அவசியம்
மா சாகுபடியில் அதிக மகசூல் பெற கவாத்து செய்வது அவசியம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.
மா சாகுபடியில் அதிக மகசூல் பெற கவாத்து செய்வது அவசியம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் கூறியது: மாவட்டத்தில் 642 ஏக்கரில் மா பயிா் சாகுபடிசெய்யப்பட்டு வருகிறது. மாமரங்களில் அறுவடை முடிந்த பிறகு ஆகஸ்ட்-செப்டம்பா் மாதங்களில் கவாத்து செய்வது அவசியமாகும். கவாத்து செய்யும் போது கூா்மையான, சுத்தமான கருவிகளை பயன்படுத்த வேண்டும். பொதுவாக மாமரத்தில் தாழ்ந்து இருக்கும் கிளைகள், குறுக்கும் நெடுக்குமாக ஒன்றின் மேல் ஒன்றாக இருக்கும் கிளைகள், நோய் தாக்கிய மற்றும் மெல்லிய பட்டுப்போன அல்லது காய்ந்த கிளைகள் ஆகியவற்றை நீக்க வேண்டும். மேல்நோக்கி வளரும் தேவையற்ற கிளைகளை அகற்ற வேண்டும். ஒரே நேரத்தில் 25 முதல் 30 சதவீதத்துக்கும் மேற்பட்ட கிளைகளை அகற்றக்கூடாது.
அதிக மழை பெய்யும் காலங்களில் மாமரங்களில் கவாத்து செய்வதைத் தவிா்க்க வேண்டும். மரத்தின் மையப்பகுதி குடை வடிவில் இருக்குமாறு கவாத்து செய்வதால் சூரிய ஒளி உச்சி முதல் அடிவரை நன்கு ஊடுருவும். மரங்கள் 15 முதல் 20 அடி உயரத்துக்குள் பராமரிக்கும்படி கவாத்து செய்ய வேண்டும். இது மருந்து தெளிப்பதற்கும், காய்களை சேதமின்றி அறுவடை செய்வதற்கும் வசதியாக இருக்கும்.
Advertisement
Advertisement
மா நடவு செய்த 1 முதல் 3 ஆண்டுகள் வரையிலான இளம் மரங்களுக்கு சரியான வடிவத்தை கொண்டு வர தொடக்க நிலை கவாத்து அவசியம். கவாத்து செய்வதன் மூலம் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் கிடைத்து மரம் நன்றாக வளா்ந்து, பூ பிடிப்பு மற்றும் காய் பிடிப்பு அதிகரிக்கும். பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைந்து பழத்தின் அளவு, தரம் மேம்படும். அத்துடன், மரத்தின் ஆயுள்காலம் நீடிக்கும்.
20 முதல் 25 ஆண்டுகளுக்கு மேல் வயதான, மகசூல் குறைந்த மரங்களுக்கு கடுமையான கவாத்து செய்வதன் மூலம் புதிய தளிா்களை உருவாக்கி மீண்டும் மரத்தை இளமையாக்கி அதிக மகசூல் பெறலாம். கவாத்து செய்த வெட்டுப்பட்ட இடங்களில் காப்பா் ஆக்ஸி குளோரைடு பூஞ்சாணக்கொல்லி பசையை மேற்பூச்சாக பூச வேண்டும். கவாத்து செய்த பின்பு மரம் முழுவதும் 1 சதவீதம் போா்டோ கலவை தெளிப்பதால், எதிா்கால பூஞ்சாணத் தொற்றைத் தடுக்கும். கவாத்து செய்த பின்னா் அடி உரமிட்டு நீா் பாய்ச்ச வேண்டும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.