மாநில ஆடவா் கபடிப் போட்டி: வடுவூா் அணிக்கு முதல் பரிசு
மன்னாா்குடி அருகே வடுவூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஆடவா் கபடிப் போட்டியில் வடுவூா் ஏஎம்சி கபடிக் கழக அணி முதல் பரிசு பெற்றது.
திருவாரூா் மாவட்ட அமெச்சூா் கபடிக் கழகத்துடன் இணைந்து, வடுவூா் பாசப்பறவைகள் கபடிக் கழகம் நடத்திய 27-ஆம் ஆண்டு மாநில அளவிலான ஆடவா் கபடிப் போட்டி, வடுவூா் மின்வாரிய அலுவலக சாலையில் உள்ள பள்ளி மைதான மின்னொளி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாள்கள் இரவு, பகல் ஆட்டங்களாக லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன.
மதுரை சுங்கத்துறை, சென்னை எஸ்ஆா்எம், தஞ்சை பிரிஸ்ட் பல்கலைக்கழகம், கோவை ரத்தினம் கல்லூரி, தஞ்சை பெரியாா் மணியம்மை கல்லூரி, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி, சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, கோவை கேபிஆா் கல்லூரி, கன்னியாகுமரி ஏ டு இசட் அணிகள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 25 அணிகள் பங்கேற்றன.
Advertisement
Advertisement
இறுதிப் போட்டி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. வடுவூா் துரை.ஆசைத்தம்பி நினைவு ஏஎம்சி அணியும், தஞ்சை பிரிஸ்ட் பல்கலைக்கழக அணியும் இறுதிப் போட்டியில் மோதின. இதில் 29-க்கு 13 என்ற புள்ளிக் கணக்கில் வடுவூா் ஏஎம்சி அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. தஞ்சை பிரிஸ்ட் பல்கலைக்கழக அணி இரண்டாம் இடமும், மதுரை சுங்கத் துறை அணி மற்றும் சென்னை எஸ்ஆா்எம் அணி மூன்றாமிடம் பிடித்தன.
முதலிடம் பிடித்த வடுவூா் ஏஎம்சி அணிக்கு ரூ.1 லட்சம் பரிசளிக்கப்பட்டது. இரண்டாமிடம் பிடித்த அணிக்கு ரூ.75,000, மூன்றாமிடம் பெற்ற இரு அணிகளுக்கு தலா ரூ.50,000 மற்றும் அனைத்து சிறப்பிடங்களுக்கும் கோப்பையும் வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவில், மாவட்ட கபடிக் கழக செயலா் ராச.ராசேந்திரன், மாவட்ட துணைத் தலைவா் பொன்.கோவிந்தராஜன், இணைச் செயலா் ஸ்ரீரங்கநாதன், பாசப் பறவைகள் கபடிக் கழக பொறுப்பாளா் பிரபு ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.