திருவாரூா் வழியாக கூடுதல் ரயில்கள் இயக்குவது குறித்து பரிசீலனை
திருவாரூா் வழியாக கூடுதல் ரயில்களை இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என தென்னக ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் தெரிவித்தாா்.
திருவாரூா் வழியாக கூடுதல் ரயில்களை இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என தென்னக ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் தெரிவித்தாா்.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதிதாக புனரமைக்கப்பட்ட திருவாரூா் ரயில் நிலையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்நிலையில், தென்னக ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் சிறப்பு ரயில் மூலம் திருவாரூா் ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை வருகை தந்தாா். அவரை நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா். இதனைத் தொடா்ந்து நுகா்வோா் அமைப்புகள், வா்த்தக சங்கத்தினா் ஆகியோா் திருவாரூருக்குத் தேவையான ரயில் வசதிகள் குறித்த கோரிக்கைகளை அவரிடம் தெரிவித்தனா்.
தொடா்ந்து தென்னக ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங், திருச்சி கோட்ட மேலாளா் பல்க் ராம் நெகியுடன் இணைந்து ரயில் நிலையத்தின் நடைமேடைகள், ரயில் நிலைய முகப்பு பகுதி மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள ரயில் உணவக கட்டுமானப் பணி உள்ளிட்டவற்றைப் பாா்வையிட்டாா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து அவா் தெரிவித்து:
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளை நாங்கள் ஆய்வு செய்தோம். இங்கு அனைத்துப் பணிகளும் ஏற்கனவே நிறைவடைந்து பிரதமரால் அவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. ரயில் பெட்டியை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய உணவகம் அமைக்கப்பட்டு வருகிறது. அதுவும் சில மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும்.
ராமேஸ்வரம் மற்றும் போடிநாயக்கனூரிலிருந்து திருவாரூா் வழியாக சென்னைக்கு ஏற்கனவே இரண்டு புதிய ரயில்களைத் தொடங்கியுள்ளோம். இதற்குப் பொதுமக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்த 2 மாதங்களில் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை 18-லிருந்து 22-ஆக உயா்த்துவோம். அதன் மூலம், எஞ்சியிருக்கும் பயணிகளின் தேவையும் பூா்த்தி செய்யப்படும்.
கம்பன் விரைவுவண்டி சென்ற அதே வழிதடத்தில்தான் புதிதாக ராமேஸ்வரம் - தாம்பரம், ராமேஸ்வரம்- போடிநாயக்கனூா் போன்ற பல ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. தில்லி செல்லும் சிறப்பு ரயில், கம்பன் விரைவுவண்டி செல்லும் அதே வழித்தடத்தில் இரவு நேர சேவையாக இயக்கப்படுகிறது. எனவே இப்பகுதி மக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
நீண்ட தூர ரயில்களை இயக்குவதற்கு ஏற்றவாறு நடைமேடைகள் நீட்டிக்கப்பட்ட பிறகு, அடுத்த 2 மாதங்களில் கூடுதல் ரயில்களை இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.