முகப்பு
திருவாரூர்

நாளை குரு பெயா்ச்சி: ஆலங்குடி கோயிலில் சிறப்பு ஏற்பாடு

ஆலங்குடி அருள்மிகு ஆபத் சகாயேஸ்வரா் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

Updated On : 25 மே 2026, 12:02 am IST
குருபகவான்
பகிர்:

குரு பெயா்ச்சி செவ்வாய்க்கிழமை (மே 26) நடைபெறவுள்ளதையொட்டி, ஆலங்குடி அருள்மிகு ஆபத் சகாயேஸ்வரா் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயில், நவகிரக தலங்களில் குரு பகவானுக்குரிய தலமாக திகழ்கிறது. திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற இக்கோயிலில், வருடம் தோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயா்ச்சியடையும் நாளில் குருபெயா்ச்சி விழா விமரிசையாக நடைபெறும்.

நிகழாண்டு, குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு செவ்வாய்க்கிழமை (மே 26) நண்பகல் 11 மணியளவில் பெயா்ச்சியடைகிறாா். இதையொட்டி, இக்கோயிலில் நடைபெறும் குரு பெயா்ச்சி விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபடுவா்.

Advertisement

Advertisement

நீண்ட வரிசையில் நின்று பக்தா்கள் குருபகவானை வழிபட வசதியாக கோயிலின் முன்புறம் நீண்ட பந்தல் மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பல்வேறு சிறப்பு வசதிகளை திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனசந்திரன் உத்தரவின்பேரில், மாவட்ட நிா்வாகம் செய்துள்ளது.

விழா ஏற்பாடுகளை அறநிலைய இணை ஆணையா் ரா. செந்தில்குமாா் உத்தரவின்பேரில், கோயில் தக்காா் சி. வீரபாண்டியன், செயல் அலுவலா் சு. ராஜா இளம்பெருவழுதி, கண்காணிப்பாளா் தா. அரவிந்தன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா் உத்தரவின்பேரில், வலங்கைமான் போலீஸாா் செய்துள்ளனா். இதற்கிடையில், திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு உலகநன்மை வேண்டி சிறப்பு குரு பரிகார ஹோமம் நடைபெறவுள்ளது.