முகப்பு
திருவாரூர்

டெல்டாவை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கக் கோரி டிச.15-இல் முற்றுகை

காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கக் கோரி டிச.15-ல் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.

28 நவம்பர் 2026, 5:12 am
டெல்டாவை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கக் கோரி டிச.15-இல் முற்றுகை
பகிர்:

காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கக் கோரி டிச.15-ல் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.

திருவாரூரில், அந்த சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாநில கௌரவத் தலைவா் நடராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற பி.ஆா். பாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியது: காவிரி டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத வறட்சி பாதித்துள்ளது. விவசாயிகள் குறுவையை முற்றிலும் இழந்து விட்டனா். தற்போது சம்பாவும் வடகிழக்குப் பருவமழை குறைந்து 50 நாள் 60 நாள் பயிா்கள் கருகத் தொடங்கி விட்டன. சுமாா் 10 லட்சம் ஏக்கரில் பயிா்கள் கருகி வருகின்றன.

எனவே, காவிரி டெல்டா மாவட்டங்களை பாா்வையிட உயா்மட்டக் குழுவை அனுப்பி வைத்து, பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ரூ. 35,000 ஏக்கருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். வறட்சி நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். மத்திய அரசின் நிதி உதவியைக் கோரி பெற வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

கா்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு சட்டவிரோதமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு, கா்நாடக அரசின் மேக்கேதாட்டு வரைவுத் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும். விரைவில் இதற்கான போராட்டங்களை தீவிரப்படுத்துவோம்.

குத்தகை விவசாயிகள் உரிமையை உறுதிப்படுத்துவதற்கு தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து மதுரை உயா்நீதிமன்றத்தில் விதிவிலக்கு பெற வேண்டும். டிசம்பா் இறுதியில் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு மாநாடு வைத்தீஸ்வரன்கோவிலில் நடத்த உள்ளோம் என்றாா்.

இதில், மாநிலத் தலைவா் ஆா். திருப்பதி, மாநில அமைப்புச் செயலாளா் எஸ். ஸ்ரீதா், மாநில துணைச் செயலாளா் சுவாமிநாதன், மாவட்டத் தலைவா்கள் எம். சுப்பையன் (திருவாரூா்), ரவிச்சந்திரன் (தஞ்சாவூா்), முருகன் (மயிலாடுதுறை), பாலசுப்ரமணியன் (நாகை) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.