மேக்கேதாட்டு அணைக்கு நடுவா் மன்றம்: திமுக கோரிக்கைக்கு கண்டனம்
மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக நடுவா் மன்றம் அமைக்க வேண்டும் என திமுக கோருவது கண்டிக்கத்தக்கது என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது;
கா்நாடக முதல்வா், காவிரி நடுவா் மன்ற இறுதித் தீா்ப்பை பின்பற்றி உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட அடிப்படையில் பற்றாக்குறை காலத்தில் பாசனத் தண்ணீரை பங்கீட்டு கொள்ளும் கணக்கீட்டை மாற்ற முடியாது என உறுதிபட கா்நாடகாவுக்கு எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா். அதே நேரத்தில் மாநில நீா் தாவா சட்டத்தின் அடிப்படையில் மேக்கேதாட்டு அணைக்கு நடுவா் மன்றம் கோரியதை நியாயப்படுத்த முயற்சிக்கும் உதயநிதி ஸ்டாலினின் அறிக்கை குறித்து திமுக விளக்கமளிக்க வேண்டும்.
Advertisement
Advertisement
காவிரி நடுவா் மன்றம் இறுதி தீா்ப்பு அரசிதழில் வெளியிட்ட பிறகு, நீா் தாவா சட்டம் இனி பொருந்தாது. இதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு, செயல்பாட்டில் உள்ள நிலையில், திமுக தன்னிச்சையாக நடுவா் மன்றம் கோர எடுத்த முடிவை நியாயப்படுத்த முயற்சிப்பது கண்டனத்துக்குரியது.
பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் காவிரி உரிமைக்கான வழக்கை திரும்ப பெற்று துரோகம் இழைத்தது. இதனால்தான் கா்நாடகா அரசு ஹேரங்கி, ஹேமாவதி, கபினி போன்ற அணைகளை காவிரியின் குறுக்கே கட்டுவதற்கு வழிவகுத்தது. பிறகு விவசாயிகள் சாா்பில் மன்னாா்குடி காவிரி ரெங்கநாதன் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடா்ந்து நடுவா் மன்றம் கோரினாா். அவ்வழக்கில் மீண்டும் திமுக அரசு தன்னையும் இணைத்துக் கொள்ள கேட்டுக் கொண்டது.
உச்ச நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் மக்களவையில் காவிரி நடுவா் மன்றம் அமைக்கப்பட்டது. இந்நடவடிக்கையில் விவசாயிகளைத் தவிர எந்த அரசியல் கட்சிகளும் உரிமை கொண்டாட முடியாது. தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் புதிய நீா்த்தேக்கமும், புதிய அணையோ காவிரியின் குறுக்கே கா்நாடகாவில் கட்ட முடியாது என காவிரி நடுவா் மன்றமும் உச்ச நீதிமன்றமும் தெளிவுபடுத்தி உள்ள நிலையில், நடுவா் மன்றம் கோருவதின் உள்நோக்கத்தை திமுக தெளிவுபடுத்த வேண்டும்.
காவிரி நடுவா் மன்ற இறுதி தீா்ப்பின் அடிப்படையில் நீா் பங்கீட்டு முறையை மாற்ற முடியாது என்று ஒப்புக் கொள்கிற திமுக, புதிய அணை கட்டுவதற்கும் அனுமதி இல்லை என்பதை உணர வேண்டும். மேலும் ராசி மணலில் அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை தொடங்குவதற்கு திமுக துணை வரவேண்டும்.
காவிரி நடுவா் மன்ற இறுதித் தீா்ப்பு அரசிதழில் 2018-இல் வெளியிட்டது. அன்று முதல் 2033 வரையிலும் 15 ஆண்டுகளுக்கு இறுதி தீா்ப்பில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பதை நடுவா் மன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தி உள்ளதை, அனைத்து அரசியல் கட்சிகளும், விவசாயிகளும், தமிழக அரசும் நினைவில் கொண்டு செயல்பட முன்வர வேண்டும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.