FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகத்திற்கு உரிமையும் இல்லை, தகுதியும் இல்லை: அன்புமணி கண்டனம்

இல்லாத உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கூறி தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்த கர்நாடகம் முயல்வதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் குறித்து...

பாமக தலைவர் அன்புமணி - கோப்புப் படம்
பகிர்:

கடைமடை மாநிலத்தின் அனுமதி இல்லாமல் காவிரியில் புதிய அணை கட்டக்கூடாது என்பதற்கான நீதிமன்ற ஆணைகள் தெளிவாக இருக்கும் நிலையில், இல்லாத உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கூறி தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்த கர்நாடகம் முயல்வதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருப்பதாவது:

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவது கர்நாடகத்தின் உரிமை; அணை கட்ட உச்ச நீதிமன்றமே அனுமதி அளித்து விட்டதால், தமிழ்நாடு உள்ளிட்ட யாருடைய அனுமதியையும் கோரத் தேவையில்லை என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். கடைமடை மாநிலத்தின் அனுமதி இல்லாமல் காவிரியில் புதிய அணை கட்டக்கூடாது என்பதற்கான நீதிமன்ற ஆணைகள் தெளிவாக இருக்கும் நிலையில், இல்லாத உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கூறி தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்த கர்நாடகம் முயல்வது கண்டிக்கத்தக்கது.

Advertisement

Advertisement

காவிரியின் கடைமடை பாசன மாநிலமான தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் இவ்வாறு கூறியிருக்கிறார். அவர் வெளிப்படுத்தியுள்ள தகவல்கள் அனைத்தும் பொய்யானவை; மேக்கேதாட்டு விவகாரத்தை திசை திருப்பக் கூடியவை; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை திரிக்கும் தன்மை கொண்டவை.

தீர்ப்பைத் திரித்துக் கூறும் டி.கே.சிவக்குமார்

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் எந்த அனுமதியும் வழங்கவில்லை. மேக்கேதாட்டு அணைக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தமிழக அரசின் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதியும், அதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீது கடந்த மே 21 ஆம் தேதியும் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி அளிப்பது குறித்து உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி மத்திய நீர்வள ஆணையத்திற்காக காவிரி மேலாண்மை ஆணையம் தான் முடிவு எடுக்கும்; அந்த முடிவில் உடன்பாடு இல்லாதபட்சத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்று தான் அறிவுறுத்தியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவு தெரியும் முன்பே தங்களை அணுகத் தேவையில்லை என்பது தான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பாகும். இது கர்நாடக முதல்வருக்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும் அரசியல் லாபங்களுக்காக உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் திரித்துக் கூறுகிறார்.

அணை கட்டும் உரிமை எவ்வாறு கிடைக்கும்?

அதேபோல், மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு இயல்பான உரிமை எதுவும் இல்லை. மாறாக, இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே கடைமடை பாசனப் பகுதிகளை பாதிக்கும் வகையில் எந்த திட்டங்களையும் முதல் மடை பாசனப் பகுதிகள் செயல்படுத்தக்கூடாது என்பது தான் நடைமுறையாகும். உலக அளவிலான ஒப்பந்தங்களிலும் இந்த நிலைப்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பகிர்வு தொடர்பாக சென்னை மாகாணத்திற்கும், மைசூர் மாகாணத்திற்கும் இடையே 1892, 1924 ஆகிய ஆண்டுகளில் கையெழுத்தான ஒப்பந்தங்களில் இது தெளிவாக கூறப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தங்களின் இந்தக் கூறுகள் செல்லும் என்று 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி அளிக்கப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிலும், 2018 ஆம் ஆண்டின் உச்சநீதிமன்றத் தீர்ப்பிலும் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகத்திற்கு அணை கட்டும் உரிமை எவ்வாறு கிடைக்கும்?

அரசியல் நோக்கம்

கடைமடை மாநிலமான தமிழ்நாட்டின் எழுத்துப்பூர்வமான ஒப்புதல் இல்லாமல் மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்க முடியாது என்று உமாபாரதி, கஜேந்திர ஷெகாவத் மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருக்கும் போது பல முறை தெரிவித்துள்ளனர். இவற்றையெல்லாம் அறிந்திருக்கும் மேக்கேதாட்டு அணை சிக்கலை டி.கே.சிவக்குமார் கையில் எடுப்பதன் நோக்கம் அரசியல் தான்.

மத்திய அரசு மறைமுகமாக ஆதரவளிக்கும்

ஏற்கனவே பலமுறை நான் குற்றஞ்சாட்டியுள்ளவாறு, கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்னும் 15 மாதங்களில் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், மேக்கேதாட்டு அணை விவகாரத்தை அரசியலாக மாற்றுவதன் மூலம் கர்நாடகத்தில் காவிரி பாயும் 11 மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியை அதிக இடங்களில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பது தான் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரின் திட்டமாகும். இதற்காக அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படவுள்ள கர்நாடக மாநில அரசின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்தல், புதிய அணைக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட அனைத்து நாடகங்களையும் கர்நாடக காங்கிரஸ் அரசு அரங்கேற்றும். அதே அரசியல் கணக்குகளுக்காக இந்த நாடகங்களுக்கெல்லாம் மத்திய அரசும் மறைமுகமாக ஆதரவளிக்கும்.

வெள்ளநீரை மட்டுமே திறந்து விடுகிறது

மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான சட்டப்பூர்வ உரிமை மட்டுமின்றி, தார்மீக உரிமை கூட கர்நாடக அரசுக்கு கிடையாது. காவிரி சிக்கலுக்குத் தீர்வு காண 1990 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட நடுவர் மன்றம், 1991 ஆம் ஆண்டில் இடைக்காலத் தீர்ப்பையும், 2007 ஆம் ஆண்டில் இறுதித் தீர்ப்பையும் வழங்கியது. அதற்குப் பிந்தைய 35 ஆண்டுகளில் ஓராண்டில் கூட நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படியோ, இறுதித் தீர்ப்பின்படியோ தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்கியதில்லை. காவிரி நீர்ப் பகிர்வில் தமிழ்நாட்டை சட்டப்பூர்வ பங்காளியாக கருத வேண்டிய கர்நாடக அரசு, வடிகாலாக கருதி வெள்ளநீரை மட்டுமே திறந்து விடுகிறது.

உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் நம்பக் கூடாது

வேறு வழியில்லாமல் வெள்ள நீரை திறந்து விட்ட கர்நாடக அரசு, புதிய அணையை கட்டி கூடுதலாக 70 டி.எம்.சி நீரைத் தேக்கி வைக்கும் திறனைப் பெற்ற பிறகு, தமிழ்நாட்டுக்கு தவறாமல் தண்ணீர் வழங்குவதாகக் கூறுவதை குழந்தைகள் கூட நம்பாது. இதை உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் ஒருபோதும் நம்பக் கூடாது.

மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது

கர்நாடகத்தில் தேர்தல் நெருங்க, நெருங்க மேக்கேதாட்டு அணை தொடர்பான பொய்மூட்டைகளையும், திரிபு வாதங்களையும் கர்நாடக அரசு அவிழ்த்து விட்டுக் கொண்டே இருக்கும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கூட கர்நாடக முதல்வர் திரித்துக் கூறுவதை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது. இதற்காக கர்நாடக அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும். கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Karnataka Deputy Chief Minister D.K. Shivakumar has claimed that Karnataka has the right to construct the Mekedatu dam across the Cauvery River and that

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.