தில்லி தலைமைச் செயலக சோதனை விவகாரம்:சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்திய விவகாரம் தொடர்பாக தில்லி அரசு தொடுத்த வழக்கில் சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்திய விவகாரம் தொடர்பாக தில்லி அரசு தொடுத்த வழக்கில் சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் தில்லி அரசின் முதன்மைச் செயலாளர் ராஜேந்திர குமாருக்கு எதிராக பல்வேறு முறைகேடு புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து, தில்லி அரசு தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் சிபிஐ, கடந்த ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி சோதனை நடத்தியது.
அப்போது அருகே இருந்த தனது அறைக்குள்ளும் சென்று சில கோப்புகளை சிபிஐ தன் வசம் எடுத்துச் சென்றதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டினார்.
Advertisement
Advertisement
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தில்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்த போது முறைகேடுகள் செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தை தில்லி லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க நடவடிக்கை எடுத்ததால், தனது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் சிபிஐ மூலம் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்ததாக கேஜரிவால் கூறினார்.
இந்த நிலையில், சிபிஐ கைப்பற்றிய கோப்புகளை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் தில்லி அரசு சார்பில் அண்மையில் வழக்கு தொடுக்கப்பட்டது.
அதை விசாரித்த நீதிமன்றம் தில்லி அரசிடம் கோப்புகளை ஒப்படைக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு செய்த வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம் கீழமை நீதிமன்ற விசாரணைக்கு பிப்ரவரி 10-ஆம் தேதி தடை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தில்லி அரசு அண்மையில் மேல்முறையீடு செய்தது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பிரஃபுல்லா சி.பண்ட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தில்லி அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவான் ஆஜராகி, "குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை, கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வெளியிடாமல் இருக்க விசாரணை அமைப்புக்கு (சிபிஐ) எந்தவித அதிகாரமும் இல்லை' என்று வாதிட்டார்.
அவரது வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தில்லி தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்திய விவகாரம் தொடர்பாக சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டனர். பின்னர் வழக்கின் அடுத்த விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.