FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை கோரி மனு: வழக்கு விசாரணை ஆக.8க்கு ஒத்திவைப்பு

பட்டாசு விற்பனைக்கான தடை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 5:44 am IST
பகிர்:

பட்டாசு விற்பனைக்கான தடை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 
பட்டாசு விற்பனைக்கான தடையை முழுவதுமாக அமல்படுத்தக் கோரி அர்ஜுன் கோபால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, நவம்பர் 1-ஆம் தேதி வரை பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் கோபால் சங்கர நாராயணன் ஆஜராகி, "கடந்த ஆண்டுகளில் நுரையீரல் புற்று தாக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் புகைப்பிடிக்கும் பழக்க இல்லாதவர்கள். இதுபோன்ற நுரையீரல் புற்றுநோய் அதிக அளவில் காற்று மாசு காரணமாக எற்பட்டிருக்கக்கூடும். எனவே, காற்றை மாசடைய செய்யும் அனைத்து விதமான பொருள்களையும் தடை செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக பட்டாசு துகள்கள் மிகவும் கேடு விளைவிக்கக் கூடியவையாகும். மேலும், ஒவ்வொரு தீபாவளி முடிந்த பின்பும் காற்று மாசு தில்லியில் அதிகரித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன' என்றார்.
மேலும், விசாரணையின் போது மனுதாரர் தரப்பு அழைத்து வந்திருந்த மருத்துவர் ஆஜராகி, "தீபாவளி முடிந்த பிறகு பலர் சுவாசக் கோளாறு பிரச்னைக்காக சிகிச்சைக்கு வருகின்றனர். இது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசுவே இதற்குக் காரணம். எனவே, நாடு முழுவதும் பட்டாசுக்குத் தடை விதிக்க வேண்டும், அந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களை வேறு வேலைக்கு அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
அப்போது நீதிபதிகள், "தீபாவளியின்போது பட்டாசுகள் வெடிப்பதால் மட்டுமே மாசு ஏற்படுகிறதா? விறகுகள், குப்பைகள் எரிப்பதால் ஏற்படுகிறதா?' எனக் கேள்வி எழுப்பினர்.
இதற்கு, மனுதராரின் வழக்குரைஞர் கோபால் சங்கர நாராயணன், "விறகுகள், அடுப்பு ஆகியவற்றால் மிகக்குறைவான அளவில் காற்று மாசு ஏற்படுகிறது. பட்டாசுகள் வெடிப்பதால்தான் அதிக அளவில் மாசு ஏற்படுகிறது' என்றார். 
அப்போது குறுக்கிட்ட பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத் தரப்பு வழக்குரைஞர் அரிமா சுந்தரம், "தீபாவளியின்போது வெடிக்கப்படும் பட்டாசுகளால் பெரிய அளவுக்கு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதில்லை' என்றார். 
அப்போது நீதிபதிகள், "பட்டாசுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை எனக் கூற முடியாது. தீபாவளிக்கு மறுதினம் பட்டாசுகளால் ஏற்பட்ட புகை மூட்டத்தை கண்கூடாகக் காண முடிகிறது, எனவே, பட்டாசுகள் மாசு ஏற்படுத்தவில்லை எனக் கூற முடியாது' என்றனர். 
அப்போது வழக்குரைஞர் அரிமா சுந்தரம், "போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அப்போது பழைய பொருள்களை எரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பட்டாசுகள் ஆண்டு முழுவதும் வெடிக்கப்படுவதில்லை. தடை செய்யுமளவுக்கு பட்டாசுகள் மாசு ஏற்படுத்துவதில்லை' என்றார். வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கு விசாரணையை வரும் புதன்கிழமைக்கு (ஆகஸ்ட் 8) ஒத்திவைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments