சுகேஷ் சந்திரசேகரின் நீதிமன்ற காவல் செப்.7 வரை நீட்டிப்பு
அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லி காவல் துறை
அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லி காவல் துறை தொடுத்த வழக்கில் கைதாகியுள்ள சுகேஷ் சந்திரசேகரின் நீதிமன்றக் காவலை செப்டம்பர் 7-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பான வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள டிடிவி தினகரன், மல்லிகார்ஜுனா உள்ளிட்டோர் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் நீதிபதியிடம் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. குற்றசாட்டுகள் மீதான வாதங்களை தொடரும் வகையில், வழக்கு விசாரணையை செப்டம்பர் 7-ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தவிட்டார்.
இந்த வழக்கில் கடந்த மே 15-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, வழக்கு தொடர்புடைய குற்றப்பத்திரிகை, தொலைபேசி உரையாடல் பதிவு, சுகேஷ் சந்திரசேகர் தங்கியிருந்த ஹோட்டல் சிசிடிவி பதிவு உள்ளிட்ட ஆவணங்கள் அடங்கிய 15 சி.டி.க்கள் கொண்ட சீலிடப்பட்ட அட்டைப் பெட்டியை நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரி சஞ்சய் ஷெராவத் சமர்ப்பித்திருந்தார்.
"காவல்துறை தரப்பில் வழங்கப்பட்ட ஆவண நகல்கள் தெளிவாக இல்லை. எனவே, ஆவணங்களின் தெளிவான நகல்கள் தர வேண்டும்' என டிடிவி தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியரது சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி அரவிந்த் குமார், ஆவணங்களின் தெளிவான நகல்கள் வழங்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 30-ஆம் தேதி ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.