FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நிர்வகிப்பதில் முறைகேடு: நாடாளுமன்றக் குழு தகவல்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நிர்வகிப்பதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நிர்வகிப்பதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து, நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐஐடி), இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் (ஐஐஎம்) போன்றவற்றில் பணிபுரியும் அரசு அலுவலர்களின் குழந்தைகள் கல்வி கற்க ஏதுவாக "கேந்திரிய வித்யாலயா அமைப்பு' உருவாக்கப்பட்டது. மத்திய அரசு நிறுவனங்களின் கோரிக்கைகளை ஏற்று கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை அந்த அமைப்பு ஏற்படுத்தி வருகிறது. 
இவற்றை நிர்வகிக்கத் தேவையான நிதியை வசூலிக்கும் உரிமை, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இப்பள்ளிகளின் நிர்வாகத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மேற்பார்வையிட்டு வருகிறது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை அமைக்கவும், நிர்வகிக்கவும் ஆகும் செலவை அந்த நிறுவனங்களோ அல்லது அந்தப் பள்ளி நிர்வாகமோ மத்திய அரசுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும். ஆனால், கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி, ரூ.59.67 கோடி இப்பள்ளிகளிலிருந்து வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.
இத்தொகையானது 81 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செலுத்த வேண்டிய தொகையாகும். அவற்றுள் 34 பள்ளிகள் பல்வேறு காரணங்களால் ஏற்கெனவே மூடப்பட்டு விட்டன. எனவே, அவற்றிடமிருந்து நிலுவைத் தொகையை வசூலிப்பது கேள்விக்குறியாகியுள்ளது.
நிலுவைத்தொகை ஒருபுறம் இருந்தாலும், அந்தப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்குத் தரமான கல்வி அளிக்க வேண்டியது தற்போதைய கட்டாயமாகியுள்ளது. எனவே, மாநில அரசுகளும், தனியார் நிறுவனங்களும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்குப் போதுமான நிதியளிக்க முன்வர வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments