அவசர நிலையை இடதுசாரிகள் ஆதரித்தனர்
அவசர நிலை அமல்படுத்தப்பட்டபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதனை ஆதரித்தது என்றும், அவசர நிலைக்கு எதிரான போராட்டத்தில்
அவசர நிலை அமல்படுத்தப்பட்டபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதனை ஆதரித்தது என்றும், அவசர நிலைக்கு எதிரான போராட்டத்தில் அந்தக் கட்சி பங்கேற்கவில்லை என்றும் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 1975-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, நாட்டில் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தினார். இந்நிலையில், அதனை நினைவுகூரும் வகையில் முகநூலில் (பேஸ்புக்) அருண் ஜேட்லி கட்டுரை எழுதி வருகிறார். அதன் மூன்றாவது மற்றும் இறுதிப் பகுதியை செவ்வாய்க்கிழமை அவர் பதிவிட்டார். அதில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் உள்ள இடதுசாரிக் கட்சிகள் எப்போதும் எனக்கு புரியாத புதிராகவே இருந்து வருகின்றன. முக்கியமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிறிதும் வெட்கமின்றி அவரச நிலைக்கு ஆதரவு அளித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட பெயரளவில்தான் அவசர நிலையை எதிர்த்ததே தவிர, எவ்வித தீவிர எதிர்ப்பையோ, போராட்டத்தையோ அக்கட்சி நடத்தவில்லை. அவசர நிலை காலகட்டத்தில் இடதுசாரி கட்சியைச் சேர்ந்த இரு எம்.பி.க்கள் மட்டுமே கைது செய்யப்பட்டனர். பொலிட்பீரோ உறுப்பினர்கள், மத்தியக் குழு உறுப்பினர்கள், மாணவர் அமைப்பின் தலைவர்கள் என யாரும் தடுப்புக் காவலில் கூட வைக்கப்படவில்லை.
ஜன சங்கம், ஆர்எஸ்எஸ், சோசலிஸ்ட் கட்சியினர், சுதந்திரா கட்சி ஆகியவை அவசர நிலைக்கு எதிராக சத்யாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சோசலிஸ தலைவர் ராம் மனோகர் லோகியா அவசர நிலை காலத்தில் மோசமாக நடத்தப்பட்டார். அவரது கொள்கையைப் பின்பற்றிய ஜார்ஜ் பெர்னான்டஸ், ராஜ் நரைன் போன்றவர்கள் காங்கிரஸுக்கு எதிரானவர்களாகவே கருதப்பட்டனர். ஆனால், இன்று சோசலிஸ கொள்கையின் வழி வந்த முலாயம் சிங் யாதவ் போன்றவர்கள் காங்கிரஸுடன் கைகோப்பதில்தான் ஆர்வம் காட்டுகின்றனர்.
அவசர நிலையின்போது 2 லட்சத்துக்கும் மேற்பட்ட போலியான வழக்குகளை காவல் துறையினர் பதிவு செய்தனர். எவ்வித முகாந்திரமும் இன்றி ஆயிரக்கணக்கான தடுப்புக் காவல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. எந்த காவல் துறை அதிகாரியோ, மாவட்ட ஆட்சியரோ இதனைத் தவறு என்று கூறவில்லை. தனது உத்தரவுக்கு ஏற்ப செயல்படாத உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையே இந்திரா காந்தி மாற்றினார் என்று ஜேட்லி தனது பதிவில் கூறியுள்ளார்.
ஜேட்லிக்கு யெச்சூரி பதிலடி: ஜேட்லியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், "அவசர நிலை காலத்தில் சிறையில் இருந்த அப்போதைய ஆர்எஸ்எஸ் தலைவர், தன்னை விடுவிக்கக் கோரி இந்திரா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்திராவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அவர் கூறியுள்ளார். இது வரலாற்றில் ஏற்கெனவே பதிவாகியுள்ளது.
வரலாற்றைத் திரித்துக் கூறுவதுதான் பாஜகவின் தொழில். அவசர நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களின் தியாகங்கள் வரலாற்றில் ஏற்கெனவே அழுத்தமாக எழுதப்பட்டுவிட்டன. இப்போதும் பாஜக, ஆர்எஸ்எஸின் அடக்குமுறைகளுக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.