கேஜரிவால் வீட்டு சிசிடிவி கேமராக்களில் தாமதமான நேரம் பதிவு: தலைமைச் செயலர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தடயவியல் அறிக்கை
தில்லி தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தின்போது முதல்வர் கேஜரிவால் வீட்டில் உள்ள
தில்லி தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தின்போது முதல்வர் கேஜரிவால் வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவில் வழக்கமான நேரத்தை விட சுமார் 40 நிமிடங்கள் தாமதமாக பதிவாகியுள்ளது என்று தடயவியல் சோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தில்லி போலீஸார் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர். இந்நிலையில், தடயவியல் சோதனை அறிக்கையை கடந்த வாரம் தில்லி போலீஸாருக்கு கிடைத்துள்ளது.
அந்த அறிக்கையில், "தலைமைச் செயலர் தாக்கப்படும் சம்பவத்தை முன்னிட்டு சிசிடிவி கேமராக்களில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டதா அல்லது தவறான நேரத்திலேயே சிசிடிவி கேமராக்கள் இயக்கப்பட்டதா என்று தடயவியல் சோதனை அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை' என்று தில்லி போலீஸ் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி முதல்வர் கேஜரிவால் வீட்டில் நள்ளிரவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷை ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கேஜரிவால் வீட்டில் பிப்ரவரி 23-ஆம் தேதி தில்லி போலீஸார் ஆய்வு செய்து சிசிடிவி கேமராக்களின் விடியோ பதிவு செய்யப்படும் ஹார்ட்டிஸ்கை பறிமுதல் செய்து தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கேஜரிவால் வீட்டில் மொத்தமுள்ள 14 சிசிடிவி கேமராக்களில் 7 கேமராக்கள் செயல்படவில்லை என்றும் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் வழக்கமான நேரத்தைவிட 40.43 நிமிடங்கள் தாமதமாக பதிவாகியுள்ளது என்றும் போலீஸார் அப்போது விசாரணையின்போது தெரிவித்தனர். தற்போது தடயவியல் சோதனையிலும் சுமார் 40 நிமிடம் தாமதமாக நேரம் பதிவாகியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
"இந்த வழக்கில் தில்லி போலீஸார் குற்றப்பத்திரிக்கையை தயார் செய்து வருகின்றனர். விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்' என்று தில்லி காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தில்லி போலீஸார் முதல்வர் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட 11 எம்எல்ஏக்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இவர்கள் அனைவரும் சம்பவம் இடத்தில் இருந்தவர்கள். மேலும், கேஜரிவாலின் முன்னாள் ஆலோசகர் வி.கே. ஜெயினிடமும் தில்லி போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அமானத்துல்லா கான், பிரகாஷ் ஜார்வால் ஆகியோரை தில்லி போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
தலைமைச் செயலர் தாக்கப்பட்ட விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி அரசின் மூத்த அதிகாரிகள், தில்லி அமைச்சர்களுடனான கூட்டங்களை புறக்கணித்து வந்தனர். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்கு தில்லி அரசின் ஐஏஎஸ் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.
இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது அமைச்சரவை சகாக்களுடன் துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். 9 நாள்களுக்கு பிறகு இந்தப் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்ததாகவும் கேஜரிவால் தெரிவித்திருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.