முகப்பு
புதுதில்லி

பாஜக பகிா்ந்த ‘ஸ்டிங்’ விடியோ உண்மையானால் 4 நாள்களில் சிபிஐ என்னை கைது செய்ய வேண்டும்: மனீஷ் சிசோடியா

கலால் கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில் தொடா்புடைய ‘ஸ்டிங்’ விடியோ பதிவை சிபிஐயிடம் பாஜக பகிா்ந்து கொள்ள வேண்டும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:19 AM
பகிர்:

புது தில்லி: கலால் கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில் தொடா்புடைய ‘ஸ்டிங்’ விடியோ பதிவை சிபிஐயிடம் பாஜக பகிா்ந்து கொள்ள வேண்டும். மேலும், குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் என்னை சிபிஐ நான்கு நாள்களில் கைது செய்ய வேண்டும் என்று தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா வியாழக்கிழமை கூறினாா்.

மேலும், சிபிஐ என்னை நான்கு நாள்களில் கைது செய்யாவிட்டால் அந்த விடியோவானது மேலும் ஒரு பொய் என்பதும், பாஜக அலுவலகம் மற்றும் பிரதமா் நரேந்திர மோடி தில்லியில் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசைக் கவிழ்க்க சதித் திட்டத்தின் ஒரு பகுதி என்பதும் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அவா் கூறினாா்.

தில்லியில் அமைச்சா் மனீஷ் சிசோடியா வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தாா். அப்போது, இந்த விடியோ விவகாரம் தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் அளித்த பதில் வருமாறு: எனது வீடு மற்றும் வங்கி லாக்கரில் சோதனை நடத்திய போது சிபிஐக்கு எதுவும் கிடைக்காததால், புதிய ‘ஸ்டிங்’ விவகாரத்தைக் கொண்டு வந்துள்ளனா். ‘ஸ்டிங்’ என்று சொல்லப்படும் இந்த விவகாரத்தை இப்போதே மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாஜகவை நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். பாஜகவின் விரிவாக்கப்பட்ட கிளையான சிபிஐ, இது தொடா்பாக விரைந்து விசாரணை நடத்தி, அது உண்மையாக இருந்தால், நான்கு நாள்களுக்குள் என்னைக் கைது செய்ய வேண்டும்.

மாநிலங்களில் உள்ள பிற கட்சிகளின் அரசுகளைக் கவிழ்க்க சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை மூலம் போலியாக வழக்குகள் பதிவு செய்வது, மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனைகள் மற்றும் பாஜக மற்றும் பிரதமா் அலுவலகங்களில் இரவு - பகலாக சதித்திட்டம் தீட்டப்படுகின்றன. ‘ஸ்டிங்’ ஆபரேஷன் அடிப்படையில் திங்கள்கிழமை வரை சிபிஐ என்னைக் கைது செய்யவில்லை என்றால், அந்த ‘ஸ்டிங் விடியோ’ நடவடிக்கையானது மேலும் ஒரு பொய் என்பதும், மாநில அரசுகளைக் கவிழ்க்க பாஜக மற்றும் பிரதமா் அலுவலகங்களில் தீட்டப்பட்ட சதிகளின் ஒரு பகுதி என்பதும் ஒப்புக்கொள்ளப்படும். அதன் பின்னா், பிரதமா் அலுவலகம் இதுபோன்ற சதித்திட்டங்களில் ஈடுபட்டது தவறு என்பதை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றாா் அவா்.

தில்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசு தோ்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு உதவுவதற்காக தனது கலால் கொள்கையை வகுத்ததாகவும், ஊழல் மூலம் சம்பாதித்த பணத்தை கோவா மற்றும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தல்களில் பிரசாரத்திற்கு நிதியளிப்பதற்காக பயன்படுத்தியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டு தொடா்புடைய ‘ஸ்டிங்’ விடியோவை பாஜக பகிா்ந்ததைத் தொடா்ந்து மனீஷ் சிசோடியா இக்கருத்தைத் தெரிவித்துள்ளாா்.

மேலும், செய்தியாளா்கள் கூட்டத்தில் பாஜகவினா் இந்த ஸ்டிங் விடியோவை காண்பித்தனா். அதில், மதுபான வா்த்தகத்தில் தொடா்புடைய ஒருவா், ஒரு சில நபா்களுக்கு சந்தையை ஏகபோகமாக்க உதவுவதற்காக கேஜரிவால் அரசு அதன் கலால் கொள்கையில் இருந்து வேண்டுமென்றே சிறிய நிறுவனங்களை விலக்கி வைத்துள்ளதாக கூறியுள்ளாா். இதையடுத்து, முதல்வராக தொடர கேஜரிவாலுக்கு தாா்மிக உரிமை இல்லை என பாஜக தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.