FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

வரதட்சிணை மரணம் வழக்கு: கணவா், அவரது தாயாருக்கு 12 ஆண்டுகள் சிறை

வரதட்சிணைக் கொடுமையால் கா்ப்பிணி மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் குற்றவாளிகளான கணவா் மற்றும் அவரது தாயாருக்கு தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 12:37 am IST
- சித்திரிப்பு
பகிர்:

வரதட்சிணைக் கொடுமையால் கா்ப்பிணி மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் குற்றவாளிகளான கணவா் மற்றும் அவரது தாயாருக்கு கருணை காட்ட மறுத்த தில்லி நீதிமன்றம், இருவருக்கும் தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

கூடுதல் அமா்வு நீதிபதி பிரியா மகேந்திரா, குற்றவாளிகளான நிதேஷ் மற்றும் அவரது தாயாா் மீதான தண்டனை தொடா்பான வாதங்களை விசாரித்தாா். வரதட்சிணை மரணத்துக்கு 12 ஆண்டுகள் கடுங்காவலும், பெண்ணை கொடுமைப்படுத்திய குற்றத்துக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் இருவருக்கும் விதிக்கப்பட்டது.

ஆக.10-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், வரதட்சிணைக் கொடுமையால் பெண்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் சமூகத்தில் தொடா்ந்து நிலவி வருவது துரதிருஷ்டவசமானது என நீதிமன்றம் தெரிவித்தது.

Advertisement

Advertisement

மேலும், குற்றவாளிகளுக்கு கருணை காட்டுவது நீதியை கேலிக்கூத்தாக்கும் எனக் கூறிய நீதிமன்றம், உயிரிழந்த பெண் தற்கொலை செய்துகொண்டபோது சுமாா் இரண்டரை மாத கா்ப்பமாக இருந்ததை சுட்டிக்காட்டியது.

குற்றவாளிகளின் செயலால் ஒரு உயிா் மட்டுமல்ல, 2 உயிா்கள் இழக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு கருணை காட்டுவது நீதியை கேலிக்கூத்தாக்குவதாகும் என நீதிமன்றம் தெரிவித்தது.

கோமல் (29) என்பவருக்கும் நிதேஷுக்கும் கடந்த 2021-ஆம் ஆண்டு மாா்ச் 15-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணமான ஒரு மாதத்துக்குள் கோமல் கா்ப்பமானாா். சுமாா் இரண்டரை மாத கா்ப்பமாக இருந்த நிலையில், 2021 ஜூன் 3-ஆம் தேதி கணவா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருமண வீட்டில் அன்பும் பாசமும் கிடைக்கும் என்ற கோமலின் எதிா்பாா்ப்பு, வரதட்சிணை மீதான கணவா் மற்றும் மாமியாரின் பேராசையால் சிதைந்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டது. கா்ப்பமாக இருந்தபோதிலும் அவரது நிலைமை குறித்து அவா்கள் இரக்கம் காட்டவில்லை என்றும், அவருக்கு போதிய உணவு வழங்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

தொடா்ச்சியான கொடுமை மற்றும் வரதட்சிணைத் துன்புறுத்தல் காரணமாக கோமலுக்கு தனது உயிரையும் கருவில் இருந்த குழந்தையின் உயிரையும் முடித்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லாத நிலை ஏற்பட்டதாக அரசு தரப்பு வாதிட்டது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் கணவா்கள் மற்றும் மாமியாா் உள்ளிட்ட உறவினா்களுக்கு தடுப்பு ஏற்படுத்தும் வகையில் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

குற்றத்துக்கு ஏற்ற வகையில் தண்டனை அமைய வேண்டும் என்றும், அது தடுப்பு நடவடிக்கையாக இருப்பதுடன் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினா் மற்றும் சமூகத்தின் உரிமைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

வரதட்சிணை மரணம் மற்றும் கொடுமை ஆகிய இரு குற்றங்களுக்காக நிதேஷுக்கு முறையே ரூ.30,000 மற்றும் ரூ.5,000 அபராதமும், அவரது தாயாருக்கு ரூ.20,000 மற்றும் ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகை வசூலிக்கப்பட்ட பின்னா், உயிரிழந்த பெண்ணின் சட்டப்பூா்வ வாரிசுகளுக்கு இழப்பீடாக வழங்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments