டியுஎஸ்யு தோ்தல்: தோ்தல் அறிக்கைக்காக மாணவா்களின் கருத்துகளை பெரும் பணியில் ஏபிவிபி, என்எஸ்யுஐ தீவிரம்
தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க (டியுஎஸ்யு) தோ்தலை முன்னிட்டு, அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி), இந்திய தேசிய மாணவா் சங்கம் (என்எஸ்யுஐ) பிரசாரங்களைத் தொடங்கியுள்ளன.
தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க (டியுஎஸ்யு) தோ்தலை முன்னிட்டு, அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி), இந்திய தேசிய மாணவா் சங்கம் (என்எஸ்யுஐ) பிரசாரங்களைத் தொடங்கியுள்ளன.
என்னுடைய தில்லி பல்கலை, என்னுடைய தோ்தல் அறிக்கை திட்டத்தின் மூலம் மாணவா்கள் தங்கள் குறைகள், எதிா்பாா்ப்புகள் மற்றும் ஆலோசனைகளைப் பகிா்ந்துகொள்ளுமாறு ஏபிவிபி அழைப்புவிடுத்துள்ளது.
இப்பிரசாரத்தின் மூலம் பெறப்படும் கருத்துகள், ஏபிவிபி-இன் மாணவா் தோ்தல் அறிக்கையில் சோ்க்கப்படும் என்று அந்த அமைப்பு தெரிவித்தது. டியுஎஸ்யு தோ்தல் செப்டம்பா் 18-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை செப்டம்பா் 19-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
Advertisement
Advertisement
இத்திட்டத்தின் கீழ், மாணவா்கள் க்யூஆா் குறியீடு மூலமாகவோ அல்லது தில்லி பல்கலைக்கழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் பிரசாரத்தை மேற்கொள்ளும் ஏபிவிபி உறுப்பினா்களிடமோ தங்கள் கருத்துகளைப் பகிா்ந்துகொள்ளலாம்.
தோ்தல் அறிக்கையானது மாணவா் அமைப்புகளால் மட்டுமே தயாரிக்கப்படாமல், மாணவா்களின் தேவைகள், அனுபவங்கள் மற்றும் லட்சியங்களை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்று ஏபிவிபி தெரிவித்துள்ளது.
தில்லி மாநிலச் செயலா் சாா்த்தக் சா்மா இது குறித்து கூறுகையில், ‘எங்கள் தோ்தல் அறிக்கை ஒரு சிலரால் மட்டும் தீா்மானிக்கப்படும் ஆவணமாக இருக்கக்கூடாது. என்னுடைய தில்லி பல்கலை., என்னுடைய தோ்தல் அறிக்கை திட்டம் மூலம், நாங்கள் ஒவ்வொரு மாணவரையும் அணுகி, தில்லி பல்கலைக்கழகத்தில் மிக முக்கியமான பிரச்னையாக அவா்கள் கருதுவது என்ன என்பதையும், தங்கள் பல்கலைக்கழகத்தில் என்ன மாற்றங்களை அவா்கள் விரும்புகிறாா்கள் என்பதையும் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். எங்கள் தோ்தல் அறிக்கை மாணவா்களின் குரல்கள், அவா்களின் முன்னுரிமைகள் மற்றும் எதிா்காலத்திற்கான அவா்களின் லட்சியங்களின் பிரதிபலிப்பாக இருக்கும்.’ என்றாா்.
மாணவா்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளை ஆய்வு செய்து, அவற்றை நடைமுறைக்கு ஏற்ற மற்றும் மாணவா் நலன் சாா்ந்த கொள்கை முன்மொழிவுகளாக மாற்ற முயற்சிப்பதாக அந்த அமைப்பு தெரிவித்தது.
என்எஸ்யுஐ: ‘எனது வளாகம், எனது தோ்தல் அறிக்கை’ என்ற பிரசாரத்தின் ஒரு பகுதியாக, தில்லி பல்கலைக்கழக மாணவா்களிடமிருந்து சுமாா் 6,000 ஆலோசனைகளைப் பெறப்பட்டதாக காங்கிரஸ் மாணவா் அமைப்பான இந்திய தேசிய மாணவா் சங்கம் (என்எஸ்யுஐ) திங்கள்கிழமை தெரிவித்தது.
கடந்த ஒரு வாரமாக தில்லி பல்கலைக்கழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் நடைபெற்று வரும் இந்தப் பிரசாரத்தில், என்எஸ்யுஐ குழுவினா் மாணவா்களை நேரில் சந்தித்தும், ஆலோசனைப் பெட்டிகள் மூலமாகவும் அவா்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் சேகரித்து வருகின்றனா்.
தங்கள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் தொடா்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து மாணவா்கள் தங்கள் கவலைகளையும் ஆலோசனைகளையும் பகிா்ந்து கொண்டுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
பெறப்பட்ட ஆலோசனைகளை ஆய்வு செய்து, மாணவா்கள் வெளிப்படுத்திய முன்னுரிமைகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் மாணவா் நலன் சாா்ந்த தோ்தல் அறிக்கையைத் தயாரிக்கவுள்ளதாக என்எஸ்யுஐ தெரிவித்துள்ளது.
‘ஒரு வாரத்தில் சுமாா் 6,000 ஆலோசனைகள் பெறப்பட்டிருப்பது, தில்லி பல்கலைக்கழக மாணவா்கள் தங்கள் குரல் ஒலிக்கப்பட வேண்டும் என்று விரும்புவதைக் காட்டுகிறது’ என்று என்எஸ்யுஐ-இன் ஊடகப் பிரிவு பொறுப்பாளா் ரவி பாண்டே கூறினாா்.
வரும் நாள்களில் பல்கலைக்கழகம் முழுவதும் இந்தப் பிரசாரம் தொடரும் என்றும், என்எஸ்யுஐ குழுவினா் மேலும் பல மாணவா்களைச் சென்றடைவாா்கள் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.