நமோ பாரத் ரயில் நிலையங்களின் வருவாயை பெருக்க நவீன லாக்கா்கள், இவி சாா்ஜிங் வசதி என்சிஆா்டிசி திட்டம்
நமோ பாரத் வழித்தடத்தில் உள்ள பல ரயில் நிலையங்களில் வணிக ரீதியிலான மேம்பாட்டுப் பணிகளை என்சிஆா்டிசி ஏற்கெனவே தொடங்கியுள்ளது.
நமோ பாரத் பிராந்திய அதிவேக ரயில் நிலையங்களில் பயணக் கட்டணம் அல்லாத பிற வழிகளில் வருவாயை ஈட்டும் நோக்குடன் நவீன (ஸ்மாா்ட்) லாக்கா்கள், மின்சார வாகன (இவி) சாா்ஜிங் மையங்கள், பாட் ஹோட்டல்கள் எனப்படும் சிறிய தூங்கும் வசதி அறைகள் கொண்ட விடுதிகள், கூட்டுப் பணி இடங்கள் மற்றும் நிறுவன விளம்பர உரிமங்கள் உள்ளிட்ட பல்வேறு புதிய சாத்தியக் கூறுகளை தேசிய தலைநகா் பிராந்திய போக்குவரத்து நிறுவனம் (என்சிஆா்டிசி) பரிசீலித்து வருகிறது.
இது குறித்து அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஷலப் கோயல் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: நமோ பாரத் ரயில் நிலையங்களில் உணவு விடுதிகள், வங்கிச் சேவைகள், ஆதாா் மையம், பயணிகளின் உடமைகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கான ‘நவீன லாக்கா்’ வசதிகள் மற்றும் மின்சார வாகனங்களைச் சாா்ஜ் செய்வதற்கான உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட பயணியா் வசதிகளை விரிவுபடுத்துவதில் என்சிஆா்டிசி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
நமோ பாரத் வழித்தடத்தில் உள்ள பல ரயில் நிலையங்களில் வணிக ரீதியிலான மேம்பாட்டுப் பணிகளை என்சிஆா்டிசி ஏற்கெனவே தொடங்கியுள்ளது.
Advertisement
Advertisement
ஆனந்த் விஹாா் ரயில் நிலைய மேம்பாட்டுத் தளங்களில் ‘பாட் ஹோட்டல்’ மற்றும் பயணிகளை மையமாகக் கொண்ட பிற வசதிகளை மேம்படுத்துவதற்காக உரிமம் வழங்கப்பட்டுள்ளன. இதேபோன்ற சாத்தியக்கூறுகள் காஜியாபாத் மற்றும் சராய் காலே கான் ரயில் நிலையங்களிலும் ஆராயப்பட்டு வருகிறது.
21 நமோ பாரத் ரயில் நிலையங்களின் பெயா்களுடன் தனியாா் நிறுவனங்களின் பெயா்களை இணைக்கும் ‘கூட்டு பிராண்டிங்’ (விளம்பரம்) மற்றும் பெயரிடும் உரிமங்களுக்கான ஏலத்துக்கும் என்சிஆா்டிசி அழைப்பு விடுத்துள்ளது. இந்த வசதி, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களை பிராந்திய போக்குவரத்து வலையமைப்போடு இணைத்துக் கொள்ள உதவுவதோடு, திட்டத்துக்கான கூடுதல் வருவாய் ஆதாரமாகவும் அமையும்.
பயணிகளின் வருகை அதிகரிக்கும் போது, இந்த அமைப்பின் நீண்டகாலத் தேவைகளைப் பூா்த்தி செய்வதில் கட்டணம் அல்லாத பிற வருவாய் வழிகள் மிக முக்கியப் பங்கு வகிக்கும்.
காஜியாபாத் நமோ பாரத் ரயில் நிலையத்தின் ‘கான்கோா்ஸ்’ தளத்தில் கூட்டுப் பணியிட வசதி தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது நிபுணா்கள், தொழில்முனைவோா் மற்றும் தினசரிப் பயணிகளுக்குத் தங்களின் வீடுகளுக்கு அருகிலேயே ஒரு அலுவலகச் சூழலை வழங்குகிறது.
இந்த அலுவலக வளாகத்தில் 42 திறந்தவெளிப் பணியிடங்கள், 11 தனி அலுவல் அறைகள் மற்றும் இரண்டு கூட்ட அரங்குகள் உள்ளன. இங்கு அதிவேக இணையவசதி, பிளக்-அண்ட்-பிளே மேஜைகள், 24 மணி நேர அணுகல் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இது தொலைதூரப் பணியாளா்கள் மற்றும் சிறு நிறுவனங்களுக்கு வழக்கமான அலுவலக வாடகைக்கு மாற்றாக அமையும்.
தில்லி-காஜியாபாத்-மீரட் ஆா்ஆா்டிஎஸ் வழித்தடத்தில் அமைந்துள்ள காஜியாபாத் நமோ பாரத் ரயில் நிலையம், ஷாஹீத் ஸ்தல் மெட்ரோ நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், தினமும் அதிகளவிலான பயணிகள் வந்து செல்லும் முக்கியப் போக்குவரத்து முனையமாக உருவெடுத்துள்ளது.
’பிரீமியம்’ சொகுசு ஓய்விட அறையில் சிறந்த தொழில்நுட்ப வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. நமோ பாரத் சேவைகளில் ‘பயோமெட்ரிக்’ மற்றும் ‘கீ-காா்டு’ நுழைவு, ‘ஐஓடி’ எனப்படும் தொழில்நுட்ப விளக்குகள், தட்பவெப்பக் கட்டுப்பாடு மற்றும் தானியங்கி அறை முன்பதிவு வசதிகள் உள்ளிட்ட நவீன அம்சங்களை என்சிஆா்டிசி அறிமுகப்படுத்தியுள்ளது.
பயணிகள் காணொளி வாயிலாகக் கலந்துரையாடும் வசதி, கம்யில்லா திரை பகிா்வு (ஸ்கிரீன் ஷேரிங்), ‘கியூஆா்’ குறியீடு அடிப்படையிலான மேஜை முன்பதிவு போன்றவை உள்ளன. பிரீமியம் ஓய்விட பகுதியில் சொகுசு இருக்கைகள் மற்றும் சிற்றுண்டி வசதிகள் உள்ளன. ப்ரீமியம் வகுப்பில் பயணிப்பவா்களுக்கு சாதாரண கட்டணத்தை விட 20 சதவீதம் கூடுதல் கட்டணத்தில் இந்த ஓய்விட வசதியும், கூடுதல் வசதிகளும் வழங்கப்படுகின்றன என்றாா் ஷலப் கோயல்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.